மேற்கண்ட மூன்று பாடல்களிலும் முதல் இரு சீர்கள் (பாதங்கள்) வேறுபட்டும், இறுதி இரண்டு சீர்கள் வேறுபடாதும் வழங்குகின்றன. மூன்றாம் சீர் “நொந்த மனமுடையவளாய் அல்லது மனத் தவிப்புடன்” என்றும், நான்காம் சீர், “புழுதிப் படுக்கையுடையவளாய்” என்றும் பொருள் படும். முதல் சீரைப் பொருத்தவரையில் மூன்று பாடங்களும் “காற்றையே உணவாகக் கொண்டு” என்னும் ஒரே பொருளைத் தருவன. கோரக்பூர் பதிப்பு மட்டும் ‘வாயு’ என்னும் சொல்லுக்குப் பதிலாக ‘வாத’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. பொருள் வேறுபாட்டை விளைவிக்காத இந்தப் பாடம் கீழைத் தேவநாகரி ஏடுகளில் மட்டுமே (D6, D8) காணப்படுகிறது இரண்டாவது சீரின் பாடபேதம்தான் பொருள் வேறுபாட்டைத் தருவதாக அமைந்துவிட்டது. வடபுல வழக்காகிய பரோடா பதிப்பு ‘நிராஹரா’ என்னும் சொல்லையும், தென்புல வழக்காகிய தர்மாலய பதிப்பு ‘ஷிலா பூத்வா’ என்ற சொல்லையும் பயன்படுத்துகின்றன. ஆனால், தென்புல வழக்காகிய கோரக்பூர் பதிப்பு வடபுல வழக்கின் பாடத்தையே கொண்டுள்ளது. தென்புல வழக்குகளில் எல்லாத் தெலுகு ஏடுகளும், சில கிரந்த ஏடுகளும் (G4) வடபுல வழக்குப் பாடமாகிய ‘நிராஹரா’ என்னும் சொல்லைக் கொண்டுள்ளன. பரோடா பதிப்பு பாடபேதமாக ‘ஷிலா பூத்வா’ என்பதைக் கொடுத்து G1 G2 G3 என்னும் கிரந்த ஏடுகளிலும், M1, M2, ஆகிய மலையாள ஏடுகளிலும் இப்பாடம் காணப்படுகிறது என்ற குறிப்பைத் தருகிறது. இவற்றுள் G1 கிரந்த ஏடு கொல்லம் ஆண்டு 993இல் (கி. பி. 1818) எழுதப்பட்டது; G2 கிரந்த ஏடு 300 ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டது; சென்னை அரசாங்கக் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள G3 கிரந்த ஏடு 500 ஆண்டுகட்கு முற்பட்டது. M1 மலையாள ஏடு கொல்லம் 687-இல் (கி. பி. 1512) எழுதப்பட்டது. M2 மலையாள ஏடு கொல்லம் 865-இல் (கி. பி. 1690) எழுதப்பட்டது.26 இவற்றை ஆராயுமிடத்து G3 கிரந்த ஏடும் M1 மலையாள ஏடும்தான் இதுவரை கிடைத்தவற்றுள் மிகப்பழைய தென்புல வழக்கு வான்மீக ராமாயணங்கள் என்பது தெளிவாகிறது. அதாவது கி. பி. 15ஆம் நூற்றாண்டளவில் தென்னகத்தே உலாவிய வான்மீகி இராமாயணம் ‘ஷிலா பூத்வா’ என்னும் பாடத்தைக் கொண்டிருந்தது என்பது உறுதியாகிறது. இங்கு வான்மீக ஏடுகளைப் பற்றி இவ்வளவு விரிவாகக் கூற நேர்ந்தது என்னையெனின், வடபுல வழக்குப்படி, “காற்றையே
26. U.P. Shah, P.95 |