யணமும், துளசி ராமாயணமும் கல்லாகச் சபிக்கப்பட்டாள் என்று கூறுகின்றன. கம்பனுக்கு முன்னர்த் தமிழிலக்கிய மரபில் பரிபாடல் 19ஆம் பாடல். இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றிய படியிது என்று உரை செய்வாரும் (50-52) என்று அகலிகை கல்லான செய்தியைக் கூறுகிறது. வான்மீகியைப் பின்பற்றுவதாகக் கூறும் தெலுகு, கன்னட இராமாயண நூல்கள் அகலிகை கல்லான சாபச் செய்தியை இரகுவம்சம் முதலான வடமொழி நூல்களைப் பின்பற்றிக் கூறுகின்றனவா அல்லது கம்பனை அடியொற்றிக் கூறுகின்றனவா என்று அறிய இயலவில்லை. கம்பனே பரிபாடலைப் பின்பற்றிக் கூறுகின்றானா, ஏதேனும் நாட்டுப்புற வழக்கைப் பின்பற்றிக் கூறுகின்றானா அல்லது நரசிம்ம புராணத்தைப் பின்பற்றிப் படைத்துள்ளானா என்று துணிய இயலவில்லை. நரசிம்ம அவதாரத்தின் மீது கம்பனுக்குத் தனிப்பற்று உண்டென்பதை அவனே முதன்முதலாகப் பாடிச் சேர்த்த இரணியவதைப் படலத்தாலும், அரங்கேற்ற நாளன்று நரசிங்கமே அவனுக்கு வாழ்த்துக் கூறி அருளிய நிகழ்ச்சியைப் பெரிய கோயிலில் கம்பர் மண்டபத்திற்கு எதிரில் எழுந்து அருளியுள்ள நரசிம்ம மூர்த்தியின் திருவுருவ உண்மையாலும் நன்கு அறியலாம். எது மூலமாயினும், வடமொழி தவிர்த்த பிறமொழி இராமாயணங்களில் தமிழில் எழுந்த கம்பராமாயணம்தான் முதன்முதலாகக் கல்லுருவெய்திய செய்தியைத் தருகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இனி. சில தென்புல வழக்கு வான்மீகி இராமாயணங்கள் கல்லாகச் சபிக்கப் பெற்ற செய்தியை எதன் அடிப்படையில் சேர்த்தன என்னும் வினா எழுகிறது. பரோடா பதிப்பு இந்தச் செய்தி தென்னக ஏடுகளுக்கு உரியது என்று குறிப்பிடுகிறது. இரகு வம்சத்தையோ, நரசிம்ம புராணத்தையோ அல்லது ஜானகி ஹரணத்தையோ பின்பற்றி இவை இந்த மாற்றத்தைச் செய்திருக்கலாம் என்று கொள்ளுவதற்கில்லை. ஏனெனில், இவ் வடமொழி நூல்களை வடபுல வழக்கு வான்மீகங்களே பின்பற்றவில்லை; தென்புல வழக்கு வான்மீகங்களிலும் தெலுகு மொழி வான்மீகங்களிலும், கீழைத் தேவநாகரி வான்மீகங்களும் பின்பற்றவில்லை. அவ்வாறிருக்க, தமிழகத்தே வழங்கிய கிரந்த வான்மீகங்களும், (G1,2,3) மலையாள வான்மீகங்களில் சிலவும் (M1, M2) இந்த வேறுபாட்டைப் புகுத்திய காரணம் என்ன என்னும் வினா எழுகிறது. வேறு தெளிவான ஆதாரத் தகவல்கள் கிடைக்கும்வரை தென் |