கம்ப ராமாயணம் இராமனின் கால்துகள் கதுவக் கல்லுரு தவிர்த்தாள் என்று கூறுகிறது. சாபமிடும்போதும் கௌதமன், “கழல்துகள் கதுவக் கல்லுரு தவிர்தி” என்று கூறுகிறான். மூன்று தெலுகு ராமாயணங்களும், தொரவெ ராமாயணமும், துளசி ராமாயணமும் இவ்வாறு கூறுகின்றன. தொரவெ ராமாயணம் இராமனின் திருவடி ஒரு கல்லின் மீது பட்டதும் அக்கல்லின் நடுவில் இருந்து அகலிகை தோன்றினாள் என்று சற்று மாற்றிக் கூறுகிறது. சீதையின் பிறப்பும் திருமணமும் சீதையின் பிறப்பு: வான்மீகத்தின்படி, “முன்னொருகால் யாகபூமியை நான் கலப்பையால் உழும்பொழுது கலப்பை கோட்டினின்று ஒரு பெண் தோன்றினாள். சுத்தி செய்யும் என்னால் எடுத்துக் கொள்ளப்பட்டுச் சீதை என்ற பெயருடன் விளங்குகிறாள். கருப்பையினின்று தோன்றாமல் பூமியில் இருந்து தோன்றிய இந்தப் பெண்ணும் என்னுடைய பெண்ணாய் வளர்ந்து வருகிறாள்” (1.66:14,15) என்று சனகன் கூறுகிறான். இராமகாதையைச் சுமார் 704 சுலோகங்கலால் பாடும் வியாச பகவானின் மகாபாரதத்தில் சீதை கருப்பையினின்றும் பிறவாதவள் (அயோனிஜா) என்ற செய்தி எங்கும் பேசப்படவில்லை. கி. பி. 4ஆம் நூற்றாண்டில் தோன்றிய விஷ்ணு புராணத்தில் சீதை ‘அயோனிஜா’ என்று கூறப்படுகிறாள். (IV: 5). கி. பி. 6 அல்லது 7ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற பாகவதத்தில்தான் முதன்முதலாகச் சீதை இலக்குமியின் அவதாரம் என்ற செய்தி கூறப்படுகிறது. (IX : 10, 11) அத்யாத்ம ராமாயணம் சீதையைப் பிரகிருதியின் (இயற்கை) அவதாரமாகக் கூறுகிறது.31 வாசுதேவ ஹிண்டியின்படி, மண்டோதரிக்குப் பிறந்த பெண் குழந்தையொன்று ஒரு நகைப்பெட்டியில் வைத்து மூடப்பெற்று வெளியில் எறிந்து விடுமாறு அமைச்சனிடம் தரப்படுகிறது. அந்த அமைச்சன் அதை ஜனகனின் நாட்டுக்குக் கொண்டு சென்று அவனுடைய யாகபூமியில் ஜனகனின் ஏர் உழும்பொழுது அதைக் கண்டெடுத்ததாக அவனிடம் தருகிறான். ஜனகன் அக்குழந்தையைத் தன்பட்டத்தரசி தாரணியிடம் கொடுத்து வளர்க்கிறான்.32 மண்டோதரிக்குப் பிறந்த பெண் குழந்தையால் இராவணன் அழிய நேரும் என்ற சோதிடரின் எச்சரிக்கை காரணமாக அக்
31. A.N. Jani, 30-32, 42 32. ibid P.64 |