டிருந்த இராமன் கன்னி மாடத்தே நின்றிருந்த சீதையைக் கண்டான்; அவளும் இராமனைக் காண்டாள்; இருவரும் ஒருவர் மீதொருவர் காதல் கொண்டனர் என்பதைக் கம்பன், வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் (1 10:37) என்று கூறுகிறான். தமிழ்க் களவியல் நெறிக்கேற்ப இக்காட்சியினைக் கம்பன் தானே புதிதாய்ப் படைத்துச் சேர்க்கிறான். மேலும், பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ என்று அவ்விருவரும் இருந்த நிலையைக் குறிப்பிடுமிடத்து அவர்தம் அவதார நிலையைச் சுட்டுகிறான். இங்கு இது களவன்று. எனவே, அவதார நிலை, மானுட நிலை இரண்டையும் தொடர்புறுத்திச் செல்வதாகக் கம்பனது காப்பியம் அமைந்து உள்ளது. தன்முன் வைக்கப்பெற்ற வில்லை இராமன் ஒரு மலர்மாலையைத் தூக்குவது போல எளிதாக எடுத்து அவையிலிருந்த அரசர்கள் ‘என்ன ஆயிற்று’ என அறியும் முன்னர் வளைத்து நாணேற்ற அவ்வில் ஊழிக்காலத்துப் பேரிடியென்னப் பெருஞ்சத்தத்துடன் முறிந்தது. ஜனகனும் தன் வாக்குப்படி சீதையை இராமனுக்கு மனைவியாகத் தர முடிவு செய்தான் என்று கம்பன் கூறுகிறான். கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற பவபூதியின் மகாவீர சரிதம் என்னும் வடமொழி நாடகம் இராமனும், இலக்குவனும் சுயம்வரத்துக்கு முன் விசுவாமித்திர முனிவரின் ஆசிரமத்திலே சீதையையும், ஊர்மிளையையும் முறையே சந்திக்கின்றனர் என்று கூறுகிறது. கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற ஜெயதேவரின் பிரசன்ன ராகவ என்னும் வடமொழி நாடகம், சுயம்வரத்திற்கு முன்னர் மிதிலையில் ஒரு உவவனத்தில் இராமனும், சீதையும் சந்தித்து மகிழ்ந்தனர். (அங்கம் 11) என்று கூறுகிறது. மேலும், சுயம்வரதிற்கு இராவணனும் வாணாசூரனும் வந்திருந்தனர் என்றும், வில்லை வளைக்க இயலாது தோற்றனர் என்றும் கூறுகிறது. அஸ்திமல்லர் என்பவரால் கி. பி. 1290 - இல் இயற்றப்பெற்ற மைதிலி கல்யாணம் என்னும் நாடகம் சுயம்வரத்திற்கு முன்னர்க் காமதேவன் கோட்டத்திலும் (அங்கம் 1) மாதவி வனத்திலும் (அங்கம் 11) இராமனும், சீதையும் சந்தித்துக் காதல் கொண்டனர் என்று காட்டுகிறது. துளசி இராமாயணத்தின்படி இராமனும் இலக்குவனும் மிதிலை நகரப் பூங்கா ஒன்றிற்கு வழிபாட்டிற்காக, மலர் கொய்யச் செல்லுகின்றனர். பார்வதியை (பவானி) வழிபடுவதற்காகத் தன் தோழியருடன் அந்தப் பூங்காவிற்குச் சீதை வருகிறாள். அங்கே இராமனும் |