13

உறுதி. மேலோர்களின் காட்சிகளையும் கண்டு, காலமும் சூழலும் தரும் புதுக்
காட்சி விளக்கங்களையும் கொண்டது இந்தப் பதிப்பு.

     யாப்பிலக்கண விதிப்படி சீர்கள் பிரிக்கப்பெறாமல், ஓரளவு தமிழ்ப்
பயிற்சி உடையவர்களும் எளிதில் மூலத்தைப் படித்துணருமாறு சொற்-
பொருள் தெளிவுக்கு ஏற்பச் சீர்கள் பிரிக்கப் பெற்றுள்ளன. இவ்வகையில்
மர்ரே கம்பெனியார் வகுத்துக்கொண்ட விதிமுறைகள் இப்பதிப்பிலே
பின்பற்றப்பெற்றுள்ளன.

     ஆயினும், யாப்பிலக்கண நெறியையும் பேணி, பாடல்கள் யாப்பு
வகையில் இன்னின்ன பா அல்லது பாவினத்துக்கு உரியன என்ற செய்தியும்
இப்பதிப்பில் தரப்பெறுகிறது.

இப்பதிப்பின் அமைப்பு

     காண்டத்தைத் திறனாய்வு முறையில் அறிமுகப்படுத்தும் முன்னுரை
வழக்கம் போல அ.ச. ஞாவால் எழுதப்பட்டு முதலில் இடம் பெறுகிறது.

     படலந்தோறும் சுருக்கமான முன்னுரை உண்டு. சொற்-பொருள்
நோக்கிய வகையில் சீர் பிரித்த செய்யுள், பதவுரை, விளக்கவுரை,
இன்றியமையாத இலக்கணக் குறிப்பு, ஒப்புமைப் பகுதி ஆகியவை கொண்டது
இவ் விளக்கவுரைப் பதிப்பு. இறுதியில் செய்யுள் முதற்குறிப்பு அகராதியும்,
அருஞ்சொல்லகராதியும் காணலாம். இடைச் செருகலாகவோ பிற
வகையாலோ நூலுள் இடம் பெற இயலாதவையாயினும், ஏடுகளில் இடம்
பெற்றுவிட்ட மிகைப் பாடல்களையும் புறக்கணிக்க விருப்பமில்லை.
ஆராய்ச்சியாளர்க்கு அம் மிகைப் பாடல்களும் ஏதேனும் பயன் தரக்கூடும்.
ஆதலால், மிகைப் பாடல்களும் காண்டத்திறுதியில் தரப்பெற்றுள்ளன.
பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ., பதிப்பு நாயகம் பேரா.மு. சண்முகம்பிள்ளை,
பேரா.அ.ச.ஞா. ஆகியோர் ஏற்கனவே வரையறுத்துள்ளபடி வெளிவந்த
சென்னைக் கம்பன் கழகப் பதிப்பு இவ்வகையில் ஓரளவு உதவியது.
சென்னைக் கம்பன் கழகப் பதிப்பிலுள்ள பாடங்களை அப்படியே ஏற்காமல்,
உரையாசிரியர்களின் ஆய்வுணர்வுக்குப் பொருத்தம் என்று பட்ட பாடங்களே
இப்பதிப்பில் இடம் பெறுகின்றன.

     மொத்தத்தில் இப்பதிப்பு ஏனைய பதிப்புகளினின்றும் வேறுபட்ட
முத்திரை பதித்த தனிப்பதிப்பு என்றால், மிகையானது.