அப்பெருமக்கள் கருதினர். அன்றியும், அகங்கார, மமகாரங்களை (யான், எனது) அறவே ஒழித்த அவர்கள், யார்மேலும் வெறுப்போ சினமோ கொள்ளுவதில்லை. எந்த இறைவனிடத்தில் தம்மை ஒப்படைத்தார்களோ அந்த இறைவனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு விருப்புவெறுப்பின்றி வாழ்தலே தம் கடமை என இவர்கள் எண்ணினர். இதனாலேயே இவர்கள் துயர்துடைக்க இறைவன் அருள் பெற்ற பலர் பல காலங்களில் தோன்றி அவனிட்ட பணியை நிறைவேற்றுகின்றனர். பகைவர்களின் வர வலிமைக்கேற்ற முறையில் இறைவன் ஒரு சிலரை அனுப்பியோ அன்றித் தானே இவ்வுலகிடைப் பிறந்தோ இவர்களை அழிக்க வேண்டியுள்ளது. இறைவன் இச்சா மாத்திரத்தில் ஆக்கல், அழித்தல் ஆகிய, முத்தொழிலையும் செய்கிறான். எனினும் கர தூடணர்கள் இராவணன் ஆகியோரை அழிக்கத் தானே அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது. ஆழ்ந்து நோக்கினால் இதற்குரிய காரணங்களையும் அறிந்து கொள்ள முடியும். அந்த ‘நானை’ அழித்திருப்பின் உலகம் முழுவதும் இறைவடிவாக இருப்பதை உணர்ந்திருப்பர். அதன் மறுதலையாக உலகம் முழுவதும் தானே நிறைந்திருப்பதாக இவர்கள் கருதிவிட்டனர். இவர்களுடைய ‘நான்’ நம்மிடம் உள்ளது போன்ற சாதாரண அகங்காரம் அன்று. அனைத்துலகத்திலும் தானே நிறைந்திருப்பதாக எண்ணும் ‘நான்’ ஈடு இணையற்ற பேரகங்காரம் (Universal Ego) ஆகும். இந்த அகங்காரத்தை அகற்ற இராமனாகவோ, நரசிம்மாகவோ இறைவன் வடிவெடுத்து வரவேண்டி உள்ளது. பரம்பொருள் இராகவனாக வடிவெடுத்து உள்ளதால் குகன் போன்ற அன்பு வடிவமானவர்கள் பயனடைகின்றனர். அன்பே வடிவான குகனும், அறிவே வடிவான வீடணனும் ஒரே நேரத்தில் பயன்பெறுகின்றனர். விராதன், சுவந்தன், அகலிகை முதலியோர் சாபம் நீங்கப் பெறுகின்றனர். சரபங்கன், சவரி முதலியோர் இவ்வுடலை விட்டுச் சென்ற பிறகே அடைய வேண்டிய இறையனுபவத்தை, இறைக்காட்சியை இந்த உடலுடனேயே பெறுகின்றனர். சரபங்கனையும் சவரியையும் தேடிச் சென்று காட்சி தருகிறான் பரம்பொருள். தீயோரை அழிப்பதுடன் நல்லோருக்கு அருள் வழங்கவும் இறைவன் எடுக்கும் அவதாரம் பயன்படுகிறது. |