பால, அயோத்தியா காண்டங்களில் காப்பியத் தலைவனின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றை மிக அற்புதமாகக் கம்பநாடன் படைத்துவிட்டான். காப்பிய நோக்கம் நிறைவேற வேண்டுமானால் பிராட்டியைப் பிரிந்து இராகவன் தொழிற்பட வேண்டும். கர தூடணர்களை அவன் அழிப்பதற்குச் சூர்ப்பணகை பயன்பட்டாள். அவர்களை இராகவன் தேடிச் சென்று அழிக்கவில்லை. அதன் எதிராக அவர்களே இராகவனைத் தேடி வந்து அழிகின்றனர். நேரிடையாக அவர்கள்மேல் போர் தொடுக்க இராகவனுக்கு எந்த முகாந்தரமும் இல்லை. முனிவர்கள் வேண்டிய போது, இவர்களை அழிக்கின்றேன் என்று இராகவன் அபயம் கொடுத்தான் எனினும், காரணமின்றிப் போரிடச் செல்ல அவன் ஒருப்படவில்லை. எனவேதான், கர தூடணர்கள் வலுச்சண்டைக்கு வந்து அழிகின்றனர். இந்தப் படலத்தை இத்துணை விரிவாக 192 பாடல்களில் பாட வேண்டிய இன்றியமையாமை என்ன? இப்போர் மூன்று நாழிகையுள் முடிந்தது என்று சூர்ப்பணகையே கூறுகிறாள். "வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில்" என்று அவளே கூறியிருக்க, இதனைக் கூற 192 பாடல்களைக் கம்பன் பயன்படுத்துகிறான். சற்று ஆய்ந்தால், இதன் காரணத்தை அறிய முடியும். காப்பியத்தின் பாதியை யுத்த காண்டம் என்ற பெயரில் படைக்கப் போகும் கவிஞன் அதற்கு முன்னர்ப் போட்டுக் கொண்ட சிறிய வரைபடம் ஆகும் இது. இரண்டாவது திருப்புமுனை யாகிய சூர்ப்பணகை சூழ்ச்சி ஒரு படலமாக விரிகின்றது. அடுத்து, மாபெரும் இராவணன் தான் பெற்றிருந்த மிக உயர்ந்த நிலையிலிருந்து கீழே விழுவதற்கு எடுத்துக் கொண்ட முதற்படியாவது இராவணன் சூழ்ச்சிப் படலமாகும். இதிலொரு வியப்பு என்னவெனின், அண்ணன் தங்கை என்ற இருவருடைய சூழ்ச்சியும் கேவலமான காமத்தை அடிப்படையாகக் கொண்டதே யாகும். இக்காண்டத்தின் தொடக்கத்திலுள்ள விராதன் வதையும், சரபங்கன் பிறப்பு நீங்குதலும் காப்பிய வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் துணை செய்யவில்லை. பின்னர் இவற்றை முறையே 70, 44 பாடல்களிலும் பாட வேண்டிய இன்றியமையாமை யாது? இராமனை இன்னார் என இனங் கண்டுகொண்டு, இறைத் தன்மையை விரித்துப்பாட முதலிரண்டு காண்டங்களிலும் இடம் இல்லை. பரம்பொருள் எதன் பொருட்டு இவ்வுலகிடைத் தோன்றினானோ அப்பெருங் காரியத்தைச் செய்வதற்குப் புறப்பட்டு விட்டான். இந்நிலையில் நாமேகூட இராமனின் உண்மையான சொரூபத்தை மறந்து, அவன் அழகிலும், அவனுடை அன்பிலும், எளிவந்த தன்மையிலும் மயங்கிவிடுகிறோம். நம் |