அன்பில் அகப்பட்டுக்கொண்ட தோழனாக நினைத்துவிடுகிறோம். மணிவாசகப் பெருமான் கூறியபடி "மழக் கை இலங்கு பொற்கிண்ணம் என்றலால் அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்" என்ற முறையில் தசாத குமாரனைக் குழந்தையாகவும் இளைஞனாகவும் வைதேகி கேள்வனவாகவும் காண நேர்ந்ததே தவிர, அப்பெருமகனின் மற்றொரு பக்கத்தைக் காணவோ அறியவோ நமக்கு வாய்ப்பில்லை. இந்த நிலையில் இராகவனை யாரென்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த அறிவுறுத்தலை இரண்டு வகையாகச் செய்யலாம். முதலாவது வகை, கவிஞன் படர்க்கைப் பரவலாகப் பரம்பொருள் இலக்கணங்களைக் கூறி அவன்தான் இராமன் என்று கூறலாம். இம்முறை அழகுடையதேனும் காப்பிய இலக்கணத்திற்கு அதிகம் பொருந்தி வராது. நாடகங்களைப் போலல்லாமல் காப்பியங்களில் கவிஞன் ஒரோவழி தானே ஒரு சூழ்நிலை அமைத்துக் கொண்டு பாத்திரப் பண்பை விளக்குகிறது முறை தான். ஆனால், கம்பநாடன் இதனைச் செய்யாமல் இரண்டாவது வகையைக் கையாளுகிறான். இந்த இரண்டாவது வகையில், காப்பியத்தில் வரும் பாத்திரங்கள் காப்பியத் தலைவன் பண்புநலன்களை விளக்கக் கூடுகின்றன. அந்த முறையில்தான் கம்பநாடன் இக்காண்டத்தின் முதலிரண்டு படலங்களில் இராமனின் மறைந்துள்ள பகுதியை விளக்க முற்படுகிறான். விராதன், சரபங்கன் இருவரும் இராமனின் மறைந்த பகுதியை எடுத்து முன்னிலைப் பரவலாகப் போற்றுகின்றனர். விராதன் என்பவன் சாபத்தால் அரக்க உருவில் வாழும் கந்தர்வன். சரபங்கன் நம்மைப் போல் மனிதனாகப் பிறந்து தவமுனிவனாக வளர்ந்துள்ள சான்றோ னாவான். விராதனைப் பொறுத்த மட்டில் இராமன் வாளால் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெரிய குழிதோண்டி அவனைப் புதைக்க வேண்டுமென்பதற்காக இராமன் வாளால் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெரிய குழிதோண்டி அவனைப் புதைக்க வேண்டுமென்பதற்காக இராமன் தனது காலால் விராதன் உடலை எட்டித் தள்ளுகிறான். இராமனுடைய திருவடி சம்பந்தம் (திருவடி தீட்சை) பெற்றவுடன் அரக்க உடலிலிருந்து பிரமனை யொத்த ஒளி பொருந்திய ஒரு கந்தருவன் விண்ணிடைத் தோன்றுகிறான். ஏனைய கந்தர்வர்களைப் பொறுத்தமட்டில் பரமனுடைய திருவடி தீட்சை கிடைத்தற்கரியதாகும். ஒப்பற்ற அப்பெரும்பேற்றை நல்லூழ் காரணமாகப் பெற்ற விராதன், அதையே பெரும்பேறாகக் கருதுகிறான். அதன் பயனாக மெய்யுணர்வு பெற்றுப் பாடத் தொடங்குகிறான். துறப்பதே தொழிலாக என்ற பாடலில், "எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ!" (2566) என்று கூறும்பொழுது, தான் பெற்ற திருவடி தீட்சை பிறர்க்குக் கிட்டாத ஒன்று என்று கூறுகிறான். அவன் இராகவனைத் துதிக்கத் தொடங்குகையில். "வேதங்கள் அறைகின்ற" (2563) |