21

என்ற பாடலில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணமுடைய பஞ்சபூதங்களிலும்
பரம்பொருளே நிறைந்துள்ளான் என்றும், எல்லாவுலகங்களிலும் அவன்
திருவடிகளே விரிந்துள்ளன என்றும் பேசுகிறான். இங்குத் திருவடி என்று
விராதன் கூறும்பொழுது அச் சொல்லுக்குத் திருவருள் என்ற பொருளையே
கொள்ள வேண்டும். இச்சொல்லுக்கு இதுதான் பொருள் என்று பரிமேலழகர்
கூறியிருத்தல்  நினைவில் கொள்ளத் தக்கது. இம் மாறுபட்ட குணமுடைய
பூதங்கள் தோறும் நீயே நிற்கின்றாய் என்று விராதன் கூறுவதில் ஓர்
ஆழமான பொருள் இருத்தலை அறிய வேண்டும். முரண்பாட்டில்
முழுமுதலைக் கண்டவர்கள் (finding unity in diversity) இத்தமிழர் ஆவர்.
அக்கருத்தைத்தான் பாடலின் மூன்று நான்கு அடிகள் விளக்குகின்றன.
இவ்வாறு கூறியவுடன் உயிர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாய்,
கருத்துள் அடங்காததாய், பற்றிக்கொள்வதற்கு இடம் தராததாய்
அவ்விறைவனின் திருவடி (திருவருள்) இருந்து விடுமோ என்ற அச்சம்
யாவர்க்கும் உண்டாவதே ஆகும்.

     இறப்ப உயர்ந்து நிற்கும் அப்பரம்பொருள் சிற்றுயிர்கள் மனமுருகி
வேண்டும்பொழுது தன் உயர்ந்த நிலையிலிருந்து கருணை காரணமாகக்
கீழிறங்கி அச்சிற்றுயிர்க்கு உற்ற துணையாய் வருகின்ற எளிவந்த தன்மை
(சௌலப்பியம்) என்பதைக் “கடுத்த கராம்” (2564) என்ற பாடலில் விராதன்
பேசுகிறான். நீண்டு செல்கின்ற விராதனுடைய துதியில் உலகம் தோன்றிய
நாளிலிருந்து இன்றும் விடை காணமுடியாமல் இருக்கின்ற ஒரு வினாவை
விராதன் எழுப்புகிறான். எத்தனை பசுக்கள் நிறைந்திருந்தாலும் ஒரு கன்று
தவறாமல் தன் தாய்ப் பசுவைச் சென்றடையும். ஆனால்,
அனைத்துயிர்களையும் படைத்த தாயாகிய உன்னை அவ்வுயிர்கள் ஏனோ
அறிந்துகொள்ளவில்லை. கேவலம் ஐந்தறிவு படைத்த பசுங்கன்றுக்கு உள்ள
உள்ளுணர்வு (Intution) ஆறறிவு படைத்த மக்களிடம் இல்லையே, இது
என்ன மாயை என்று வருந்துகிறான் விராதன். (2570).

     பலபடியாகத் திருவடிப் பெருமை பேசிய விராதன், தம்மாட்டுக்
கொண்ட பரிவுணர்ச்சியால் அரக்க உடம்பிலிருந்து வேறு பல பிறவிகள்
எடுத்து வளர்ந்து செல்லாமல் நேரிடையாக வீடு பேற்றை அடைய
வழிசெய்தது பெருமானுடைய திருவடி சம்பந்தம் என்ற கருத்தை,

 “ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா!
     முன் உவந்து உறையும்