23

பிரமலோகமும் உன்னை வரவேற்கக் காத்திருக்கின்றன; வருக" என்று
வேண்டுகிறான். இவ்வாறு இந்திரன் வேண்டுகிற அதே நேரத்தில்
சரபங்கனுடைய ஆசிரமத்தின் வெளியே இராம இலக்குவர்கள் நிற்கின்றனர்.
அதனைத் தன் ஞானத்தால் உணர்ந்து சரபங்கன் "எனக்கு வரவேண்டிய
வீடுபேற்றை அளிப்பவன் வெளியே நிற்கின்றான். நீ தர வேண்டிய பதங்கள்
எனக்குத் தேவையில்லை" என்று பேசுகிறான். அதே நேரத்தில், வீடுபேற்றின்
இலக்கணத்தைக் கீழ்வரும் பாடலில் அற்புதமாக எடுத்து விளக்குகிறான்.

 "சில காலை இலா, நிலையோ திரியா,
 குறுகா, நெடுகா, குணம் வேறுபடா,
 உறு கால கிளர் பூதம் எலாம் உகினும்
 மறுகா, நெறி எய்துவென்; - வான் உடையாய்;" (2606)

     சரபங்கன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த இந்திரன் இராமனை
இன்னான் என்று அறிந்துகொண்டு 2610 முதல் 2617 வரை உள்ள எட்டுப்
பாடல்களில் பரம்பொருளின் தன்மையைப் பேசுகிறான். ஆயிரம் யாகங்கள்
செய்து இந்திரப் பெரும் பதத்தில் இருக்கும் அவனும் விராதனைப் போலவே
முரண்பாட்டில் முழுமுதலைக் காண்கிறான். அவ்வெட்டுப் பாடல்களுள் ஈடு
இணையற்று விளங்குவது.

 "மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை;
     வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை;
மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை;
     முதல் இடையோடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை;
தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால்,
     சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவ,
காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே;
     கருங் கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ?" (2614)

என்ற பாடலாகும்.

     இவ்விரு படலங்களிலும் நம்மை வியக்க வைக்கும் செய்தியும் உண்டு.
அரக்க வடிவிலிருந்து திருவடி சம்பந்தம் பெற்ற விராதன் வீடுபேற்றை
அடைகிறான். முழு ஞானியாகிய சரபங்கனோ வீடு பேற்றின் இலக்கணத்தை
மிக அற்புதமாக 2606 ஆம் பாடலில் கூறி இந்திர பதத்தையும் பிரம
லோகத்தையும் உதறி விட்டு இராமனைத் தரிசித்து வீடுபேற்றை அடைகிறான்.
இவர்கள் இருவரை மட்டுமல்லாமல் இந்திரனும் இராமனைத் தரிசிக்கிறான்.
இவர்களைப் போலவே அவனும் இறை இலக்கணத்தைப் பேசுகிறான்