என்றாலும், தான் பெற்ற இந்திரப் பதத்தை உதறிவிட்டு வீடு பேற்றை அடைய அவன் விரும்பவில்லை. கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் இந்த இரண்டு படலங்களில் உபநிடதங்களைச் சாறாக பிழிந்து இந்நாட்டுக் கடவுட் கொள்கையையும் அதனுடன் குழைத்து ஏறத்தாழ 24 பாடல்களில் தந்துவிடுகிறான். அம்மட்டோடு இல்லாமல் குற்றமே குணமா வாழ்ந்த விராதன், மாபெரும் ஞானியின் வாழ்க்கை வாழ்ந்த சரபங்கன் ஆகிய இருவரும் வீடுபேற்றைப் பெரிதென மதித்துப் பெறுதலையும், தேவர்கோன் ஆகிய இந்திரன் இவர்களோடு ஒப்பிடுகையில் சிறியவனாக ஆகிவிடுதலையும் குறிப்பால் உணர்த்துகிறான். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பநாடனைப் பொறுத்த வரையில் இரண்டு பெரிய கொள்கைகள் தாக்கத்திற்கு இலக்காயின. கம்பனுக்கு முன்னர் இரண்டாயிரம் ஆண்டுகளாக இத்தமிழகத்தில் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற பக்தி இலக்கியத்தின் தாக்கம் ஒன்று. சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, சங்க காலத்தில் ஓரளவு வளர்ச்சி அடைந்து ஆறுமுதல் எட்டு வரையுள்ள மூன்று நூற்றாண்டுகளில் பெரும் புயலாக மாறியது பக்தி இயக்கம் ஆகும். "குவியிணர்ப் புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா" என்பது முதலாகச் சங்கப் பாடல்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் இத்தமிழர் கொண்ட கொள்கை பரந்து காணப்படுகிறது. | ".... யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும்அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும்- உருள் இணர்க் கடம்பின் ஒளி தாரோயே! (பரிபாடல் 5 77-80) அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னைத் துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம் இன்னும் இன்னும் அவை ஆகுக- தொன்முதிர் மரபின் நின் புகழினும் பலவே! (பரிபாடல் 14 29-32) செரு வேல் தானைச் செல்வ! நின் அடி உறை, உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்குப், பிரியாது இருக்க-எம் சுற்றமொடு உடனே! (பரிபாடல் 18 54-56) |
பரிபாடலில் காணப்படும் இவ்வரிகளில் இத்தமிழரின் பக்தி வழியில் பொன், பொருள், போகம், இந்திரப் பெரும்பதம் ஆகிய எவற்றுக்கும் இடமில்லை என்பது நன்கு வெளிப்படும். இக் கொள்கைகள் நாளாவட்டத்தில் வளர்ந்து, |