இலக்கணத்தை அனுமன் பேசுவதாகக் கம்பன் பேசுகிறான். ‘மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும் மைத்து ஆய’ (5884) என்ற பாடல் உபநிடதப்பிழிவும் இதனையடுத்து வரும் பாடல் இந்நாட்டுப் பக்தி இயக்கத்தின் பிழிவும் சேர்ந்து விளங்குவனவாக உள்ளன. அறிவுக்கும், கற்பனைக்கும் சொல்லுக்கும் கடந்து நிற்கும் ஒரு பொருளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு துல்லியமான முறையில் அப்பொருளின் இலக்கணத்தை விராதன், சரபங்கன் படலங்களில் கவிச்சக்கரவர்த்தி வைத்துக் காட்டுகிறான். எனவே, முன்னிரண்டு காண்டங்களைப் போல் அல்லாமல் ஆரணிய காண்டம் நம் கவனத்தை இழுத்துப்பிடித்து மேலே செல்ல ஒட்டாமல் தடுத்து விடுகிறது. மூன்றாவதாக உள்ள அகத்தியப் படலம் இராகவனுடையவன வாழ்க்கையில் பத்தாண்டுகளை இரண்டொரு பாடல்களின் மூலம் நடத்திச் செல்கிறது. இராவணன் முதலியோருடன் தசரத குமாரன் போர் தொடுக்க வேண்டுமானால் அதற்கொரு காரணம் வேண்டும். இதுவரையில் அக்காரணம் வெளிப்படையாகப் பேசப்படவில்லை. அது மிக இன்றியமையாது வேபைப்படுதலின் கவிஞன், அகத்தியப் படலத்தில் அதற்குரிய நிலைக்களனை அமைக்கின்றான். பஞ்சவடியில் முனிவர்கள் பலரும் அரக்கரால் தாம் படும் துன்பத்தை விரிவாகக் கூறி ‘அருளுடை வீர! நின் அபயம் யாம்’ என்றார் (2646) என்று பேச வைக்கிறான் கம்பன். அபயம் என்று அடைந்தவர்களை எப்படியும் காப்பது என் கடனாகும் என்று பேசிய கார்வண்ணமேனியான், ‘வேந்தன் வீயவும், யாய்துயர்மேவவும்’ (2648) என்ற பாடலில் காட்டிற்கு வந்தது தான் செய்த புண்ணியம் என்று கூறுகிறான். அபயம் என்று வந்தவர்களைக் காப்பதுதான் அரசனாகப் பிறந்தவனின் தலையாய அறம் என்று கூறி அரக்கர்களை அழித்து விடுகிறேன் என்று உறுதி கூறுகிறான். இவ்வாறு தசரத குமரன் உறுதி கூறும்பொழுது முனிவர்களின் பகைவர்களாகிய இராவணாதியர் ஆற்றலை, தவ வலிமையை அறிந்திருக்க வாய்ப்பில்லை. பகைவரைக் குறைத்து மதிக்கும் தவறு நேர்ந்துவிடாமல் காக்க ஒரு வாய்ப்பு வேண்டும். அதனைத்தான் அகத்தியன் செய்கின்றான். மந்திர வலிமை பெற்ற பேராற்றல் உடைய பல படைக்கலங்களை அகத்தியன் இராமனுக்குத் தருகிறான். அவற்றின் ஈடு இணையற்ற சிறப்பை (2685, 2686) அகத்தியன் கூறுவதாகக் கவிஞன் அமைக்கிறான். ஆரணிய காண்டத்தில் மூன்று படலங்களில் இரு பெரிய காரியத்தைக் கவிஞன் சாதித்துவிடுகிறான். தசரத குமாரனும் வைதேகி கணவனும் |