தேவர்கள், ஓரறிவுடைய மரஞ்செடி கொடிகள் ஆகிய அனைவரிடத்திலும் சினம் கொண்டு இவர்களை அழித்துவிடுகிறேன் என்று புறப்படுகிறான். காப்பவனாகிய அவன் (திருமால்) அழிப்பேன் என்று தொடங்கினால் யார் அவனைத் தடுக்கமுடியும்? உலகெலாம் கலக்கி முடியும் இலக்குவன் சினந்தால் இராகவன் அவன் சினத்தை மாற்ற முடியும். இராகவனே சினந்தால் அவனை மாற்றுபவர் யார்? இத்தகைய அற்புதமான சூழ்நிலையை உண்டாக்கி, கவிஞன் தான் படைத்த சடாயுவை இப்போது பேசுமாறு செய்கிறான். பிராட்டியின் அலறலைக் கேட்ட சடாயு, ‘அஞ்சேல்’ என்று கூறி மேலெழுந்து வந்து அவனைத் தூக்கிச் செல்லும் பகைவன் இராவணன் என்பதை உடனே அறிந்துகொள்கிறான். பல்லாண்டுகள் வாழ்ந்தவனாகிய சடாயு இராவணன் யார் என்பதையும் அவனுடைய ஆற்றலையும் "முக்கோடி வாழ்நாளையும், பெருந்தவத்தையும் யாராலும் வெலப்படாய்" என்ற வரத்தையும் நன்கறிந்தவன். இவற்றை அறிந்தும் துணையிலக்கணத்தை மனத்துட் கொண்ட சடாயு, இராவணனிடம் பெரும்போர் நிகழ்த்தி அவனுடைய தேர்க்கொடி, பத்துக் கிரீடங்கள், அவனுடைய வில், சாரதி, குதிரைகள் என்ற அனைத்தையும் வீழ்த்தினான் என்றால் அக்கழுகின் வேந்தன் "செயற்கரும் செயல்கள் செய்த" பெரியவன் ஆகிறான். சிவபெருமானிடம் பெற்ற சந்திரகாசம் என்ற வாளை இராவணன் பயன்படுத்தியிராவிட்டால், இராவணன் பிராட்டியை இலங்கை வரை கொண்டு சென்றிருப்பானா என்பது ஐயத்திற்குரியது. இத்துணைச் சிறப்புகளையும் ஒரு பறவைக்கு ஏற்றி, உலக இலக்கியங்களில் வேறு எங்கும் காணப்படாத நிலையில் அப்பாத்திரத்தைப் படைக்கிறான் கவிச்சக்கரவர்த்தி. இக்காண்டத்தின் ஐந்தாவது படலம் சூழ்ப்பணகைப் படலம் ஆகும். இராவணன் தங்கையாகிய சூர்ப்பணகை வனத்திடைத் திரிந்து வேண்டுவன கொண்டு மனம் போன வழியில் வாழ்பவளாவாள். இராமனிடம் அவள் வரும்போது கொண்ட கோலமும் நடையும் இராம இலக்குவரை அல்லாமல் வேறு யாராக இருப்பினும் மயக்கும் தன்மை உடையவனவாகும். அவளைக் கண்டு இராமனே வியக்கின்றான் என்கிறான் கவிஞன். அத்தகைய ஒருத்தியைக் கவிஞன் அறிமுகப்படுத்தும் முறை வியப்பைத் தருவதொன்றாகும். | நீல மா மணி நிற நிருதர் வேந்தனை மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள், மேலைநாள் உயிரொடும் பிறந்து, தான்விளை காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய நோய் அனாள். (2739) | |