29

ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூன்று உலகங்களிலும்
ஆட்சி செலுத்தும் நிருதர் வேந்தனாகிய இராவணனை அழிக்க அவன்
தங்கையாகிய பெண்ணே வந்தாள் என்று கூறுவது வியப்பு. இத்துணைப்
பேராற்றல் படைத்த ஒருவனை, அவனை மட்டுமல்லாமல் அவன்
குலமுழுவதையும், வேரும் வேரடி மண்ணும் அழிக்க ஒரு பெண்ணால்
இயலுமா என்ற ஐயம் நம் மனத்துத் தோன்றுமானால், அதற்கு விடை
கூறுபவன்போல இவள் அதனைச் செய்வது உடல் வன்மையாலோ
தவபலத்தாலோ அல்லது வரத்தின் மேன்மையாலோ அல்ல என்று காட்ட
வந்த கவிஞன் "முடிக்கும் மொய்ம்பினாள்" என்ற ஒரு சொல்லால் விடை
கூறுகிறான். ‘மொய்ம்பு’ என்ற சொல்லுக்கு வலிமை என்பதே பொருளாயினும்
இந்தச் சந்தர்ப்பம் நோக்கி மனவலிமை, அறிவு வலிமை, சூழ்ச்சி வலிமை
என்று பொருள் கொள்ளவும் தகும். வடிவத்தால் பெண், உருவத்தால்
சிறியோள் என்று எண்ணிட வேண்டா என்று நம்மை எச்சரிப்பதற்கு
அற்புதமான உவமையைக் கையாள்கிறான். எண் சாண் உடம்பில் ஒரு சிறு
உறுப்பின் உள்ளே மறைந்து ஒளிந்து காலம் நோக்கிக் காத்திருக்கும் ஒரு
நோய், தக்க காலம் வந்தவுடன் அவ்வுடலை அழிப்பது போல இவள்
உள்ளாள் என்கிறான் கவிஞன்.

     சூர்ப்பணகையைப் பொறுத்தவரை, இராமனது அழகில் ஈடுபட்டு
அவனை அடைய விரும்பினான். பிராட்டியைக் கண்டு திடுக்குற்றாள்.
இப்படியும் ஓர் அழகி இவ்வுலகிடை இருக்க முடியுமோ எனக் கருதினாள்.
இந்த நிலையில் பெண்களுக்கே உரிய ஒரு தருக்கத்தைத் தன்னுள்
தோற்றுவித்துக் கொள்கிறாள். மூன்று உலகங்களிலும் காணப்பெறாத
இத்தகைய அழகி இராமன் மனைவியாய் இருப்பாளோ என்று ஐயுற்றாள்.
இவள் இவன் மனைவியாக இருப்பின், அவளைப் பெற்ற இராகவன் பிற
பெண்களை ஏறெடுத்தும் பாரான் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள். இது
நியாயமானதும் பொருத்தமானதும் ஆன வாதம் ஆகும். ஆனால், அவள்
கொண்ட காம வெறி காரணமாகத் தான் கொண்ட இம் முடிவைப் புறத்தே
ஒதுக்கிவிட வழி தேடுகிறாள். அம்முயற்சியின் பயனாக ஒரு குதர்க்க வாதம்
அவள் மனத்தில் தோன்றுகிறது. இவ்வளவு அழகு உடையவள் மனைவியாக
இருப்பின் எந்த ஒரு மனிதனும் காட்டுக்கு அழைத்து வந்து பர்ணசாலையில்
குடியேற்றி இருக்க மாட்டான் (2790) என்பது அவளுடைய வாதம். இந்த
முடிவிற்கு அவள் வர எந்த ஆதாரமும் இல்லை. இந்தத் தவறான முடிவிற்கு
வந்தவுடன் அவள் மனம் இதற்கடுத்து ஒரு வினோதமான முடிவிற்கு
வருகின்றது. காட்டிலே மனைவியைக் கொண்டு வரமாட்டான் என்ற தவறான
முடிவிற்கு வந்த பிறகு, அந்தத் தவற்றிலிருந்து பல தவறுகள் பிறக்கின்றன.