காட்டிலுள்ள இவள் அவன் மனைவி அல்லள் என்றால், இவள் யார் என்ற வினா அடுத்து நிற்கிறது. அவள் தமையனாகிய இராவணனுடைய அத்தாணியில் அரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகிய அனைவரையும் இவள் பன்முறை கண்டிருக்கிறாள். இப்பெண்ணின் அழகு அவர்கள் ஒருவரிடமும் இல்லை. அப்படியானால் இவள் யார்? யாரென்பதை இவளால் யூகிக்க முடியவில்லை என்றாலும், மனைவி அல்லள் என்ற தவறான முடிவிற்கு அவள் ஏற்கனவே வந்துவிட்டமையின், அவள் யார் என்ற வினாவிற்கு ஒரேயொரு விடைதான் மிஞ்சுகிறது. இவளும் தன்னைப்போல இடையே வந்த ஒருத்தியாகும் என்ற கருத்தில் என்னைப் போல் இடையே வந்தாள் (2793) என்ற முடிவிற்கு வந்துவிட்டாள். இந்த முடிவிற்கு வந்த பிறகு தன்னுடைய பணி சுலபமானது என்று கருதுகிறாள். இவளும் இடையில் வந்தவள். இருவரும் சமநிலையும் உரிமையும் பெற்றுள்ளதால் முதலில் இடையே வந்த அவளை விட்டுவிட்டு இந்த அழகன் என்னை ஏன் விரும்பக் கூடாது என்ற ஆராய்ச்சி அவள் மனத்தில் பிறக்கின்றது. அவளது மனத்தில் தோன்றி வாதம் முழுவதும் தவறான அடிப்படையில் தோன்றியதாகும். ஒருவேளை மனைவியாக இருப்பாளோ என்ற ஐயம் அவள் மனத்தில் ஏன் வலுப்பெறவில்லை? மனைவியாக இருப்பின் பிற மாதரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். இந்த ஐயமும் இதன் விடையும் அவள் மனத்தில் கால் கொள்ளாதது ஏன்? நடுவுநிலைமையோடு சிந்தித்திருப்பின் இந்த வினாவும் விடையும் அவள் மனத்தில் கால்கொண்டு இருக்கும். இத்தனை வாதங்களையும் மீறி இராகவன் மீது கொண்ட காமவெறி அவள் அறிவை மயக்குகிறது. அண்ணன்-தங்கை இருவரும் காமவெறிக்கு ஆளாகும்போது எந்தத் தர்க்கத்தையும் எந்த விவாதத்தையும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இலக்குவனிடம் மூக்கறுபட்ட நிலையில் ‘உங்களை மாய்ப்பதற்குக் காலனைக் கொண்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கரன் முதலானவர்களிடம் செல்கிறாள். இந்த வினாடி வரை தன் காமவெறியைத் தணித்துக் கொள்வதற்கு வழிதேடினாளே தவிர, இராமனுடன் தங்கியுள்ள பிராட்டியை இராவணனிடம் கொண்டு செல்ல வேண்டுமென்ற எத்தகைய எண்ணமும் இல்லை. தன் காம வெறி நிறைவேறாத போது, தன் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மிகுந்திருந்தது. கரனிடம் சென்று ‘எனக்குத் துயரிழைத்த இருவரையும் அழிக்க வேண்டும் வா’ என அரற்றினாள். ‘இந்நிலையில் உன்னை இவ்வாறு செய்ய நீ அவருக்கு என்ன பிழை செய்தாய்’ என்று அவன் கேட்காமலேயே |