31

சந்தர்ப்பத்திற்கேற்பப் பல பொய்களை அடுக்குகிறாள். நிருதர்களை
அழிக்கவே தசரதன் புதல்வராகிய இருவர் வந்தனர் என்று (2878) கூறியது
உண்மையானது ஆகும். இதனை முதலில் கூறுவதன் நோக்கம் ‘உங்கள்
குலத்தை அழிக்க விரதம் பூண்டவனை நீ அழிக்கப் புறப்படுக’ என்று
கூறுவதாகும். இந்நிலையில் கரன் உடனே புறப்பட்டிருந்தால் அடுத்து ஒரு
பொய்யைச் சொல்லத் தேவை ஏற்பட்டிருக்காது. தலைவனாகிய
இராவணனிடம் கொண்டு சேர்ப்பதற்குரிய ஒரு பரிசுப் பொருளை (அழகே
வடிவான பிராட்டியை)த் தூக்கிக் கொண்டு மேலெழுந்தேன்; அவர்கள்
என்னை இவ்வாறு செய்து விட்டார்கள் என்ற இந்தச் சமயோசிதமான
இப்பொய் கரனைத் துடித்தெழச் செய்தது. இராமன் மாட்டுத் தான் கொண்ட
காமவெறியால் நிகழ்ந்தது என்பதை முழுவதுமாக மறைத்துத் தன்னுடைய
அண்ணனுக்குச் சிறந்த பரிசு தரப் புறப்பட்டேன் என்று கூறி முடிக்கிறாள்.

     இதனைக் கேட்ட கரன், இவள் எத்தகைய பிழையும் செய்யவில்லை.
"மையின் மதியின் விளங்கு முகத்தாரை வௌவிக் கொளலும் அறன்"
(குறிஞ்சிக்கலி) என்ற முடிவில் கரன் போருக்குப் புறப்பட்டு விட்டான்.
இந்த நிலைவரை சூர்ப்பணகைக்கு எவ்விதச் சூழ்ச்சியும் மனத்தில்
தோன்றவில்லை. தன்னை அவமானப்படுத்தியவர்களைப் பழி வாங்க
வேண்டும் என்ற எண்ணமே அவளிடம் இருந்தது.

     அடுத்துள்ள படலம் கரன் வதைப் படலமாகும். மூன்று நாழிகையில்
முடிந்த போரை ஏறத்தாழ 192 பாடல்களில் கவிஞன் சொல்லக்
காரணமென்ன என்ற வினாவை எழுப்பி இக்கட்டுரையின் முற்பகுதியில்
விடை கண்டுள்ளோம். காப்பியத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு இடம்
கொள்ளும் யுத்தகாண்டம் பாட, வரையப்பட்ட வரைபடமாகும் இது என்று
கூறினோம்.

     சிலப்பதிகாரம், உதயணன் கதை, சீவக சிந்தாமணி, இவை
அனைத்திலும் அங்கங்கே போர் பற்றிய பகுதி இடம்பெறுகிறது.
செங்குட்டுவன் போரைப் பற்றிப் பாடவந்த அடிகள், அதில் அதிகக் கவனம்
செலுத்தவில்லை. முன்னும் பின்னும் பிடைக்காத உதயணன் கதையில் இதைப்
பெரிதாகப் பாடினாரா என்பதை அறிய வாய்ப்பில்லை. தேவர் பாடிய
சிந்தாமணியில் போருக்கு நிரம்பச் சந்தர்ப்பம் உண்டென்றாலும் சச்சந்தன்
செய்த போரையோ, இறுதியில் சீவகன் செய்த போரையோ தேவர் விரிவாகப்
பாடவில்லை. அன்புநெறி, உயிர்கள் மாட்டு இரக்கம், துறவு, தவம்
ஆகியவற்றுக்கே முதலிடம் தரும் சமண சமயத்தின் ஈடு இணையற்ற