32

காப்பியமாகிய சிந்தாமணியில் போர் பற்றி விரிவாகப் பாடத் தேவர்
பெருமான் விரும்பவில்லை. பின்னே வருகின்ற பெரிய புராணத்திலும் இதற்கு
வாய்ப்பே இல்லை. எஞ்சியுள்ளது கம்பனது இராமகாதைதான். தனக்கு
முன்னும் பின்னும் எந்தக் காப்பியத்திலும் காணப் பெறாத போர் பற்றிப்
பாடுவதற்கு இக்கவிச் சக்கரவர்த்திக்குத் தமிழிலக்கியத்தில் முன்னோடி
யாருமில்லை. முதல் நூலாகிய வான்மீகத்தில் இது விரிவாக உள்ளது. எனவே,
கம்பநாடன் அரிதின் முயன்று ஒரு காண்டம் முழுவதும் போர் பற்றிப் பாட
முடிவு செய்துவிட்டான்.

    அக்காலத்திய போர்கள் இரண்டு வகையாகச் செய்யப் பெற்றன.
முதலாவது வகை, பகை என்றவுடன் தன்வலி, துணை வலி ஆகிய
அனைத்தையும், ஒன்று திரட்டி முழுமூச்சாகச் சென்று போரிடுவதாகும்.
இரண்டாவது வகை போர் என்று வந்தவுடன் அமைச்சர்கள், அறிஞர்கள்
ஆகியோரைக் கூட்டித் தன்வலி, துணைவலி என்பவற்றோடு மாற்றான்
வலியையும் ஒப்பிட்டு எவ்விடத்தில் எப்பொழுது, எவ்வாறு போர் புரிய
வேண்டும். பகை நம்மை தாக்குகின்ற வரை பொறுத்துப் போரிடுவதா
அல்லது பகை மேற்சென்று போரிடுவதா என்றெல்லாம் தக்காரோடு கூடி
ஆய்ந்து பின்னர்ப் போரிடுவதாகும்.

     கம்பநாடனைப் பொறுத்தவரை இந்த இருவகையையும் கையாள்கிறான்.
கரதூடணர் போர் முதல் வகையைச் சேர்ந்தது. இராவணனது போர்
இரண்டாவது வகையைச் சார்ந்தது ஆகும். சூர்ப்பணகை சொல்லியவுடன்
பகைவர் யார் எவர் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல் படை முழுவதையும்
ஒரு சேரத் திரட்டிக் கொண்டு சென்று போர் தொடங்க ஆயத்தமானான்.
படைத் தலைவர் தூடணன், திரிசிரா ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச்
சென்று மடிய இறுதியில் கரன் போரிட்டு மாள்கிறான். இந்தப் போரில்
தன்னை அனுப்புமாறு இலக்குவன் பலமுறை வேண்டியும் அதனை மறுத்து
இராகவன் தானே போரிடுகிறான். இலக்குவன் ஒருவனே இதனைச் செய்து
முடிப்பான் என்பதை அறிந்திருந்தும் இராமன் அவனுக்கு இடங்கொடாமல்
தானே போருக்குப் புறப்படுவது ஏன் என்று தெரியவில்லை. அரக்கர்களை
அழிக்க வேண்டும் என்பது இராகவனுடைய குறிக்கோளாக நிலைபெற்று
விட்ட நிலையில் அரக்கர்களின் வன்மை எத்தகையது, வரபலம் எத்தகையது,
போராற்றல் எத்தகையது என்பதை அறிந்து கொள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்ள இராகவன் துணிந்திருக்க வேண்டும். அதனால்தான்
தம்பியை நிறுத்தி, தானே புறப்பட்டான் போலும். இவ்வாறு நினைப்பது
சரியே என்பதற்கு ஒரு காரணமும் உண்டு. கரனுடன் போர் செய்கையில்