அம்புமாரியால் இராமனையே மறைத்துவிடுகிறான். வெகுண்டெழுந்த இராமன் வில்லை வளைக்க அது முறிந்துவிடுகிறது. அரக்கருடன் போர் செய்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பதைக் கவிஞன் இங்கே கோடிட்டுக் காட்டுகிறான். கரன் வதைப் படலம் பின்னர் வரப்போகும் யுத்த காண்டத்திற்கு முன்னுரையாக அமைந்துள்ளதைக் காண்கிறோம். அடுத்து வருவது சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலமாகும். சூர்ப்பணகை, கரன் முதலியோர் இவ்வளவு விரைவில் மடிவர் என்பதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது அவள் மூளை வெகுவிரைவாகப் பணிபுரிகிறது. இராவணனிடம் சென்று முறையிட்டு இராமனுடன் அவனைப் போர் செய்யுமாறு தூண்டிப் பழி தீர்த்துக் கொள்ள முடிவு செய்கிறாள். இராவணனைப் பற்றி நன்கு அறிவாள். அறுபட்ட மூக்கைப் பார்த்துக் கரன் புறப்பட்டது போல அறிவில் மேம்பட்டவனாகிய இராவணன் புறப்பட மாட்டான். அவனைப் புறப்படச் செய்ய வேண்டுமானால் அவனுக்கு ஏதாவது நன்மை உண்டு என்று காட்டினால் ஒழியத் தங்கையின் அவமானத்தை ஒழிப்பதற்காக மட்டும் அவன் புறப்பட மாட்டான் என்பதை நன்கு அறிந்து கொண்டாள். ஒருவன் இவ்வுலகில் பெற விரும்பும் பேறுகள் அனைத்தையும் பெற்று வாழ்பவன் இராவணன். அவனுடைய ஆசையைத் தூண்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று. கூர்மையான அறிவு படைத்தவளாகிய சூர்ப்பணகை அண்ணனுடைய வாழ்வில் மென்மையான பகுதி (weak spot) எது என்பதை நன்கு அறிந்து கொண்டாள். காமவெறி என்பதே அண்ணன் தங்கை இருவருக்கும் பொதுச் சொத்து. எனவே, அதனைக் கருவியாகக் கொண்டு இராவணனைத் தூண்டி விட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தாள். அந்த முடிவுடன் இலங்கை சென்ற அவள், எடுத்த எடுப்பிலேயே சீதையைப் பற்றிச் சொன்னால் அவன் ஆசை தூண்டப் படுமோ படாதோ என்று சந்தேகிக்கிறாள். அதற்காக அவள் கையாளும் சூழ்ச்சி மிக அற்புதமானது. அண்ணனிடம் சென்று இழந்த மூக்கைக் காட்டினாள். சற்றும் அலட்டிக் கொள்ளாமல் இலங்கையர் கோன் ‘யார் இது செய்தார்’ என்றான். மானுடர் இருவர் என்றாள் விடையாக. இராவணன் அதை நம்பத் தயாராக இல்லை. இவ்வளவு பெரிய அவமானம் கேவலம் இரண்டு மனிதர்களால் நடந்துவிட்டது என்பதை அறிந்தும் இராவணன் கொதித்தெழவில்லை. கரதூடணர்களிடம் ஏன் உதவிக்குச் செல்லவில்லை என்ற வினாவைத் தங்கையிடம் கேட்கிறான். ஒரே வரியில், ‘வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில்’ என்றாள். இந்த விடை இராவணனை ஆழ்ந்த |