கூறி, ‘அப்பழியைத் துடைக்க இராமனின் மனைவியைக் கவர வேண்டும். அதற்கு நீ துணை செய்க’ என்கிறான். மாரீசன் இதனை ஏற்கவில்லை, பழிதுடைக்கப் போர் செய்வது வேறு, ஆனால் ஒருவன் மனைவியைக் கவர்வதனால் குலத்திற்கேற்பட்ட பழியை எவ்வாறு துடைக்க முடியும்? பிறர்மனை நயந்த பழியும் அல்லவா உடன் சேரும் என்று பலபடியாகக் கூறுகிறான். கரதூடணர் வதையால் தன் ஆழ்மனத்தில் ஏற்பட்ட கலக்கத்தை வெளிகாட்டிக்கொள்ளாத இராவணன், இழிந்தவர்களாகிய மானுடருடன் போரிடுவது என்பது தனக்கும் கயிலை மலையைப் பேர்த்தெடுத்த தன் கைகளுக்கும் அவமானம் என்று பேசுகிறான். இறுதியாக மாரீசன் பொன் மானாக வடிவெடுத்துச் செல்கிறான். அடுத்துள்ள இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் தற்பெருமையும் அகங்காரமும் உடையவர்கள் எளிதில் தம்மைக் காட்டிக் கொள்வர் என்ற கருத்து பேசப்படுகிறது. துறவி வேடத்தில் பிராட்டியை அணுகிய இராவணன் மிக நல்லவன்போல் நடித்துப் பேசுகிறான். துறவி என்று நினைத்து அப்பேதைப் பெண் அரக்கர்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறாள். துறவி வேடத்தில் இருக்கும் ஒருவன் அப்பேச்சைக் கேட்டுக் கொண்டு கண்டும் காணாமல் இருந்திருத்தல் வேண்டும். தற்பெருமையும், அகங்காரமும் கொண்ட இராவணன் தன்னை இன்னான் என்று காட்டிக் கொள்கிறான். இப்படலத்தின் பெயர் இராவணன் சூழ்ச்சிப் படலம் என்று இருந்தாலும், இராவணனுடைய உண்மையான சூழ்ச்சி மாரீசன் வதைப் படலத்தோடு முடிந்துவிடுகிறது. அடுத்துவரும் சடாயு உயிர் நீத்த படலத்தில், சடாயு தந்தையினிடத்தில் இருந்து மைந்தனாகிய இராமன் சினத்தைத் தணித்தது மிகச் சிறந்த பகுதியாகும். பிராட்டியைக் கொண்டு சென்றவன் யார் என்பதைக் கூறுவதற்கு முன்னர் அவன் ஆவி பிரிந்துவிடுகிறது. அபயம் என்று கூவி அழுத ஓர் அபலைப் பெண்ணுக்காக மாபெரும் தலைவனுடன் போரிட்டு உயிர்நீத்த காரணத்தால் பரம்பொருளின் கைகளால் நீர்க்கடன் பெறுகின்ற வாய்ப்பைப் பெறுகின்றான், சடாயு. பெற்று வளர்த்த தந்தையாகிய தசரதனுக்கு, தந்தை உரிமை பற்றிக் கிடைக்க வேண்டிய இந்தச் சிறப்புக் கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல, "எண்ண அரிய குணத்தாலும் எழிலாலும் இவ் இருந்த வள்ளலையே அனைய" (657) பரதனாலும் கூட நீர்க்கடன் பெறவில்லை தசரதன் என்பதை நினைக்கும் பொழுது "வகுத்தான் வகுத்த வகையல்லால்" என்ற குறள் நினைவிற்கு வருகின்றது. இராமகாதையில் இராமாவதாரம் எடுத்த பரம் பொருளின் கையினால் நீர்க்கடன் செய்யப்பெறும் தந்தை |