உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார்-அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே. ஒரு தெய்வத் திருப்பணி தமிழ்த் தாய் செய்த அருந்தவப் பயனாய்ப் பிறந்த கவிஞர்’ என்ற பெருமைக்கு முற்றிலும் தகுதியுடையார் எனத் தக்கவருள் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தலையாயவர். இது மிகைப்பட்ட கணிப்பு அன்று; உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை. ‘புவியினுக்கு அணியாய்’ எனத் தொடங்கும் பாடலில் (2732) சிறந்த கவிதையின் இயல்பு கூறுவார் கம்பர். அவ்வியல்பின் கொள்கலனாய் இராமவதாரப் பாக்கள் பொலிவதைப் பயில்வோர் எவரும் உணர்வர். நவில்தோறும் நயங்கனிந்து காட்டும் கம்பர் படைப்பில் ஆழங்காற்பட்ட ஒரு புலவர் ‘கம்பநாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே’ என்று போற்றினார். தமிழுக்குக் ‘கதி’ ஆவார் இருவர் என்ற வாக்கிலே ‘க’ கம்பரைக் குறித்தது. தமிழச்சாதி அமரத்தன்மை வாய்ந்தது என்ற நம்பிக்கையைப் பாரதியாருக்கு நல்கிய நூல்கள் மூன்றுள் கம்பராமாயணம் ஒன்று. இந்த அருமைப் பெருமித நூலுக்கு உரை வரைவித்து வெளியிடக் கிடைத்த பெருமை பல்பிறவிகளில் செய்த தவத்தின் விளைவு என்பது உறுதி. இப்பணி தெய்வத் திருவருள் கூட்டுவித்தது என்பதை இம் முயற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் உணரமுடிந்தது. குன்னூர்க் குன்றம் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகக் கம்பராமாயண உரை நூல்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. சிறந்த கல்வி நிலையங்களிலும் நூலகங்களிலும்கூடக் கம்பராமாயண உரை நூல்கள் காண்பது அரிதாகிவிட்டது. இந்த நினைப்பிலே தோய்ந்து கவலைப் பட்டுக் கொண்டிருந்த சிலர் கடந்த 1992 ஏப்ரலில் குன்னூர்க் குன்றிலே கூடினர். சேவாரத்ன டாக்டர் ஆர். வேங்கடேசலு நாயுடு அவர்களின் மாளிகையில் செவ்வாய்தோறும் காலையில் நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களையும் மாலையில் கம்ப ராமாயணத்தையும் அனுபவிக்க ஒரு குழு கூடிவருகிறது. இந்த மங்கள வாரக் குழு சில |