படைத்த வாலியிடம் செல்லுமாறு கூறாமல் சுக்கிரீவனிடம் செல்லுமாறு சவரி பனித்தது ஏன்? மிகச் சிறப்பான ஒரு காரணம் இதனுள் மறைந்துகிடப்பதை அறிய வேண்டும். சவரியைப் பொறுத்த மட்டில் 'இராவணனை வெல்லுதற்கு வாலியின் துணையைப் பெறுக' என்று கூறியிருக்கலாம். அவ்வாறு செய்வதில் மாபெரும் பிழையொன்று ஏற்படும். பிறன்மனை நயந்தவனாகிய இராவணனைத்தண்டிக்கப் பிறன்மனை நயந்த மற்றொருவனாகிய வாலியைத் துணைக்கொண்டான் இராமன் என்ற பெரும்பழி வருவதற்குச் சவரி காரணமாகி விடுவாள். வாலியைப்பற்றி ஒன்றும் அறியாத இராகவனை அவனிடம் போகுமாறு பணிப்பது பெரும் பிழையாகும். இவ்வழி தவறு என்றால், சவரி மற்றொரு வழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். சவரி இராகவன் யாரென்று அறிந்தவள்; அவன் 'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவன்' என்பதை நன்கு அறிவாள். எனவே, சுக்கிரீவனுடைய குரக்குப்படை இராமனுக்குத் தேவை இல்லையென்பது உண்மைதான். இராகவன் தனியே சென்று இராவணனிடம் போரிட்டால், இராவணனை வென்றிருக்கலாம். ஆனால், அவனுடன் நட்புக் கொண்ட வாலி இராவணனுக்குத் துணையாகக் களத்தில் இறங்கினால், இராகவனுக்கே பெரும் தொல்லையாக முடியும். காரணம்: வாலி, ''கிட்டுவார் பொரக் கிடைக்கின் மற்றவர் பட்ட நல்வலம் பாகம் எய்துவான்'' என்ற உண்மை தெரியாத இராகவன், சிக்கலில் அகப்பட்டுக் கொள்ள நேரிடும். எனவே, இந்த இரண்டு வழிகளையும் தவிர்த்துச் சுக்கிரீவனைத் துணைகோருமாறு வழி கூறினாள் சவரி. அன்றியும், சீதையைத் தேடுதல் இராம இலக்குவர் ஆகிய இருவரால் மட்டுமே செய்யக்கூடிய செயலுமன்று. மேலும் தொண்டு என்ற ஒரு பொருளுக்கு முழு இலக்கணமாக வாழ்கின்ற அனுமனின் துணையும் தசரத குமாரர்க்குக் கிட்டாமல் போய்விடும். அனுமன் சுக்கிரீவனிடம் பணி புரிகின்றவனாதலின் சுக்கிரீவன் துணையை அனுமன் பொருட்டாக இராமன் நாட வேண்டியதாயிற்று. இதனாலேயே, தொடக்கத்திலேயே கிட்கிந்தைப் படலம் சிறப்புப் பெறுகிறது. இப்படலம் பம்பைவாவிப் படலத்தில் தொடங்கி மயேந்திரப் படலம்முடியப் பதினாறு படலங்களைக் கொண்டுள்ளது. இக்காண்டத்தில்தான் ஈடுஇணையற்ற வீரனும், பாற்கடலைத் தன் இரு கைகளால் கடைந்தவனும், இராவணனை வாலில் கட்டி எட்டுத் திக்குகளிலும் சென்றவனும், அட்டமூர்த்தி தாள் பணிபவனும், இராமபாணத்தின் செயலைத்தடுத்து நிறுத்தும் ஆற்றலனும் ஆகிய வாலியை முழுவதுமாகக் காண்கிறோம். வாலிவதைப் படலம் ஏழாவது படலமாக அமைந்துள்ளது. வாலியின் வரலாற்றை முழுவதும் அறிந்துகொள்ளாமல் போரில் இறங்கினால் |