இராகவனும் அல்லற்பட நேரிடும். எனவே, பகைவலியை இராகவன் நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தில் சொல்லின் செல்வனாகிய அனுமன் (3821 முதல் 3834 முடிய) பதினான்கு பாடல்களில் வாலியின் வரலாற்றை விரிவாகக் கூறுகிறான். இதனை மனத்துள் வாங்கிக் கொண்ட இராகவன், வாலியின் எதிரே சென்று போர் புரிதல் பயன் விளைக்காது என்பதை நன்று அறிந்துகொள்கிறான். நீண்ட யோசனைக்குப் பிறகு. சுக்கிரீவனைப் பார்த்து 'நீ சென்று வாலியைப் போருக்கு வலிய அழைத்து அவனிடம் போரிடுக. அப்பொழுது நான் மறைந்திருந்து அம்பு தொடுத்து வாலியைக் கொல்வேன். இதுவே என்னுடைய முடிவாகும்' என்று கூறுகிறான். இப்பாடல் ஆழ்ந்து சிந்தித்துப் பொருள் கூற வேண்டிய ஒன்றாகும். அப்பாடல்வருமாறு: அவ் இடத்து, இராமன், நீ அழைத்து, வாலி ஆனது ஓர் வெவ் விடத்தின் வந்துபோர் விளைக்கும் ஏல்வை, வேறு நின்று எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது' என்றான்; தெவ் அடக்கும் வென்றியானும், 'நன்று இது' என்று சிந்தியா. (3944) இப்பாடலில், இரண்டு, மூன்றாம் அடிகளில் வரும் 'வேறுநின்று ஏ விடத் துணிந்தது என் கருத்து இது' என்ற பகுதி வாலி வதையின் அடித்தளத்தை நன்கு விளக்கப் பயன்படும். சுக்கிரீவனைப் பார்த்து, 'வாலியை வலியச் சென்று போருக்கு அழைப்பாயாக' என்று கூறுகின்ற அதே நேரத்தில், தான் எவ்வாறு போர் செய்து வாலியைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் (Strategy) இராமன் வகுத்துக் கொண்டான். 'மறைந்து நின்றுதான் அம்பு எய்யப் போகிறேன் (ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு) நான் கண்ட முடிபாகும் இது' வென்று பேசுகிறான். 'வேறு, நின்று' என்ற சொற்கள் மறைவாக நின்று என்பதையும் 'ஏ (அம்பை) விடத் துணிந்தது' (எய்ய முடிவு செய்து விட்டேன்) என்ற சொற்கள் நீண்ட சிந்தனைக்குப் பிறகு இராகவன் கொண்ட முடிவு என்பதையும் காட்டும். இவ்வழியைத் தவிர வேறு வழியில் வாலியைக் கொல்லஇயலாது. வாலி இறந்தால் ஒழிய இராவண வதம் தடையின்றி நடைபெறஇயலாது. எனவே, இம்முடிவுக்கு இராகவன் வருகிறான். ஒரு பெரு நன்மையை முடிக்க வேண்டிய இடத்தில் சிறு தவறுகளைச் செய்துதான் அந்த நன்மையை விளைவிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்பொழுது. அத்தவறுகளைச் செய்வது நியாயமே மாகும். இப்பாடலை இவ்வளவு விரிவாகக்காண்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதனைப் பின்னர்க் காணலாம். |