20

என்று கூறினாலே போதுமானது என்பதைவிட்டுத் 'தெரிய' என்ற சொல்லைக்
கவிச்சக்கரவர்த்தி வேண்டுமென்றே பயன்படுத்துகிறான். இராகவன் பெயரை
அம்பில் எதிர்பார்க்காத வாலிக்கு அம்பில் பொறிக்கப்பட்ட பெயர் நம்பிக்கை
தரவில்லை. தான் கண்ணால் காண்பது பொய்யோ என்று பலமுறை பார்த்து
அறிவினால் ஆராய்ந்து, இறுதியாக அது மெய்தான் என்ற முடிவிற்கு
வந்தானாதலின், அதனை விளக்கவே 'கண்களில் தெரியக் கண்டான்'
என்கிறான் கம்பன்.

     அம்பை எய்தவன் இராமன்தான் என்ற முடிவு ஏற்பட்டவுடன் வாலியின்
மனநிலையை மிக அற்புதமாகக் கவிச்சக்கரவர்த்தி ஒரு பாடலில் படம்
பிடித்துக் காட்டுகிறான். 'பிறர்பழியம் தம் பழியும் நாணுவார். நாணுக் குறைபதி
என்னும் உலகு' (1015) என்ற குறளுக்கு விளக்கவுரையாக இப்பாடலை
அமைக்கிறான் கவிஞன்.

இல்லறம் துறந்த நம்பி, எம்மனோர்க்காகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால், வேத நல்நூல்
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான்  (4014)

அம்பு பட்டதால், தன் உயிருக்கு ஊறு நேர்ந்தது என்ற எண்ணம் வாலிக்குத்
தோன்றவே இல்லை.

     மாபெரும் வீரனாகிய அவன், சுக்கிரீவனைப் போல, உயிருக்கு
அஞ்சினவனும் அல்லன். எனவே, அவனுடைய மனத்தில் தோன்றிய
முதலாவது  எண்ணம் 'இந்த அம்பை யார் எய்திருக்க முடியும்' என்ற
வினாவாகும். அந்த வினாவிற்கு விடை, அம்பைத் தெரியக் கண்டவுடன்
கிடைத்தது. உடன் ஏற்பட்ட எண்ணம் நாணமாகும். சூரிய குலத் தோன்றல்
ஒருவன்கூட 'வில் அறம்' துறந்தானே என்ற எண்ணம் தோன்றியவுடன்
நகைப்பும் நாணமும் ஒருங்கே தோன்றின என்கிறான் கவிஞன்.

     இராகவனைப்பற்றி அவன் கொண்டிருந்த எண்ணங்கட்கு முற்றிலும்
மாறான ஒரு செயல் இப்பொழுது நிகழ்ந்துவிட்டது. சூரியகுலத் தோன்றலாகிய
இராகவன் வீழ்ச்சியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. கதிரவனே
விண்ணிலிருந்து மண்ணில் வீழ்ந்துவிட்டது போன்ற ஒரு வீழ்ச்சி என்று
நினைக்கிறான். அதனாலேயே, ''சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும்,
தொல்லை நல் அறம் துறந்தது'' என்று நினைக்கின்றான். இந்த இடத்தில்
ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் - சீசர் என்ற நாடகத்தில் சீசரின் இறப்புப்