பற்றிப் பேசுகின்ற அன்ட்டனியின் ஒரு தொடர் ஒப்பு நோக்கத்தக்கதாகும். "What a fall was there, my countrymen When the great ceaser fell you and I and all of us fell". 'சொல் அறம் துறந்திலாத' சூரியன் மரபில் வந்த நம்பியாகிய இராகவன்' 'வில்அறம் துறந்தான்' என்ற எண்ணம் தோன்றிய அளவில் வாலியின் மனத்தில்பகைமையோ காழ்ப்புணர்ச்சியோ சினமோ தோன்றவில்லை. அவற்றின் எதிராகநகைப்பும் நாணமும் தோன்றின; கவிக்கூற்றாக வருவது இப்பாடல். வாலியைஎடைபோட இப்பாடலைப் பயன்படுத்துகிறான் கவிஞன். இந்நிலையில் இராகவன் எதிரே வருகின்றான். வாலி அவனைக் காண்கின்றான். வாலியினுடைய கண்கள், புற மனம் ஆகியவை இராமனை இகழ்ச்சியுடன் காண்கின்றன. அனால், அவனுடைய அகமனம் அக்காட்சியில் லயித்து எங்கோ செல்கிறது. அக மனம் கண்ட காட்சியைத்தான். கவிஞன் கண்ணுற்றான் வாலி, நீலக் கார்முகில் கமலம் பூத்து மண் உற்று, வரிவில் ஏந்தி, வருவதே போலும் (4016) என்ற அடிகளில் கூறுகிறான். 'செம்மைசேர் நாமத்தைக் கண்களில் தெரியக் கண்ட'தற்கும், இப்பொழுது 'மண்ணுற்று வரிவில் ஏந்தி வருகின்ற' வடிவத்தை அக மனம் கண்டதற்கும் ஒரு தொடர்புண்டு. மந்திரங்கட்கு வடிவம் உண்டு என்று மந்திரநூலார் கூறுவர். 'ஸ்ரீராம' என்ற தாரக மந்திரத்தை வரிவடிவமாக முதலில் காண்கிறான் வாலி. அந்தப் பெயர் அவனுடைய புற மனத்தில் இகழ்ச்சி நாணம் என்பவற்றை உண்டாக்கியது உண்மைதான். ஆனால், அதே நேரத்தில் அந்த மந்திரம் அவனது அக மனத்தில் புகுந்து வேலை செய்யத் துவங்கியது. இராமன் எதிரே வந்து தோன்றியவுடன் அக மனம் 'ஸ்ரீராம' என்னும் மந்திரத்தின் பரு வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை அறிவிப்பதுபோல அவ்வடிவம் காட்சி அளித்தது. ''நீலக் கார்முகில், கமலம் பூத்து, மண்ணுற்று, வரிவில் ஏந்தி வருவதே போலும்'' என்ற சொற்களை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நீல நிறம், சிவப்பு நிறம் என்ற இரண்டும் ஆதியான நிறங்கள் (primary colours) ஆகும். இவை இரண்டும் மூலப் பரம்பொருளை அறிவுறுத்தும் அடையாளங்கள் ஆகும். வரிவில் என்பது பேராற்றலை அறிவுறுத்தும் அடையாளம் ஆகும். எனவே, 'இராம' என்ற சொல்லைக் கண்ணிற் கண்ட பிறகு, வாலி காணும் காட்சி அம்மந்திரத்தின் சொரூபம்போல் உள்ள நீலம், சிவப்பு என்ற நிறங்களின் கூட்டமும் பேராற்றலின் வடிவமே |