ஆகும். இராமன் என்ற தசரத குமாரனைக் கண்டான் என்று கூறாமல், 'கார்முகில் கமலம் பூத்து வரிவில் ஏந்தி மண்ணுற்றது' என்று கம்பன் கூறும்பொழுது 'ஒரு நாமம், ஓருருவம் இல்லாத பரம் பொருளை'க் குறிக்க மனித வடிவத்தையே விட்டுவிட்டுக் கமலம் பூத்த கார்முகில் என்றும், அக்கார்முகில் வில் ஏந்தி மண் உற்றது என்றும், இராம என்ற சொல்லின் சொரூபம் இதுதான் என்றும் வாலி புரிந்துகொண்டான் என்று கூறவந்த கம்பன்,நம்மையும் ஓரளவு புரிந்துகொள்ளுமாறு செய்கிறான். இந்த நிலை வாலிக்கு எவ்வாறு வந்தது என்ற வினாத் தோன்றுவது இயல்பேயாகும். வாலியைத் தவிர ஏனையோர் இதற்கு விடை கூறுவது இயலாது. எனவே, அந்த அனுபவத்தில் திளைத்த வாலி இம்மனநிலை தனக்கு வந்த காரணத்தையும் போகிற போக்கில் உணர்த்துகிறான். ஓர் உயிருக்கு இறைஅனுபவம் கிட்ட வேண்டுமேயானால், இறைவன் நேரடியாகவோ, குருமுகமாகவோ வந்து தான் அதனைத் தரமுடியும். அப்படி வருகின்ற நேரத்திலும் தீட்சை என்ற ஒரு முறையைக் கையாள்வர். இது ஸ்பரிஸ தீட்சை, நயன தீட்சை, திருவடி தீட்சை என்று பலவகைப்படும. இந்த உபதேசம் பெற்றபிறகு, பெற்றவர்கள் மனநிலையில் மாபெரும் மாற்றங்கள் தோன்றி இறையனுபவம் கிட்டும். அதன்பிறகு, அவர்கள் காட்சியே மாறிவிடும். அதற்கு முன்னர் அவர்கள் கண்டவை, கேட்டவை அனைத்தும் புதிய பொருளைத் தரும். வாலியைப் பொறுத்தமட்டில், கார்முகில் கமலம் பூத்து வரிவில் ஏந்தி மண் உற்று 'இராமா' என்ற மந்திரத்தை வாலிக்கு உபதேசம் செய்தது; முற்கூறிய ஸ்பரிஸ, நயன தீட்சை முறைகளை மேற்கொள்ளாமல் அவனுடைய மார்பில் அம்பைச் செலுத்தி உபதேசம் செய்யம் புதிய முறையைக் கையாண்டது. இதனை நன்கு உணர்ந்துகொண்ட வாலி, இராமனிடம் பேசும்போது, ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடியனேன் ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய் (4063) என்று கூறுகிறான். இப்பாடலில் உள்ள 'ஆவிபோம் வேலைவாய்' என்ற சொற்களையும் 'ஏவுகூர் வாளியால் அறிவு தந்து அருளினாய்' என்ற சொற்களையும் கவனிக்க வேண்டும். இதுவரையில் தன் மருமத்திடை இராமன் தன் அம்பைச்செலுத்திக் கொல்ல முனைந்தான். அதுவும் மறைந்திருந்து இதனைச் செய்தான் எனவும் பல பாடல்களில் இராமனைக் கடுமையாகச் சாடியுள்ளான் வாலி. ஆனால், இப்பொழுது இராமன் அம்பால் தான் சாகவில்லை என்பதை நன்கு உணர்ந்துகொண்ட காரணத்தால் 'ஆவிபோகின்ற வேளையில் |