24

இவ்வுகில் உள்ள பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் காண்பானேயானால்,
அக்காட்சி முற்றிலும் புதிதாகவே இருக்கும். இஞ்ஞானத்தைப் பெறுவதற்கு
முன்காணப்பட்ட அதே நிகழ்ச்சி, ஞானம் பெற்றபின்னர் வேறு மனநிலையை
உண்டாக்குகிறது. நிகழ்ச்சி ஒன்றுதான். ஆனால், அதைப்  பார்ப்பவனுடைய
மனநிலை மாறிவிட்டதால் காட்சி அனுபவமே மாறிவிடுகிறது. இப்பார்வை
கிடைக்குமுன்னர் இராமன் பகைவனாக இருந்தான், 'அற வேலியைப்
படுத்தான்', 'மறைந்து இருந்து அம்பு எய்து வில்லறம் துறந்தான்' என்ற
முடிவுகள் அறிவு பெற்றபின்னர் முற்றிலும் மாறி விடுகின்றன. இப்பொழுது
வாலி என்று யாருமில்லை. அம்புஎன்று ஒன்றுமில்லை. குற்றம் என்று
ஒன்றுமில்லை. குணம் என்று ஒன்றும் இல்லை. மறைந்திருந்து அம்பு எய்தல்,
நேரே நின்று அம்பு எய்தல் ஆகியவை அர்த்தமற்ற வேறுபாடுகள்; வில்லறம்
என்ற ஒன்று தனியே இல்லை. பற்றற்ற பரம்பொருள் ஒன்றைச் செய்யுமானால்
அச்செயலுக்கு ஒரு நோக்கம் கற்பிப்பது - நேரே பொருதல், மறைந்து நின்று
பொருதல் என்ற வேறுபாடுகளைக் கற்பிப்பது என்பவையெல்லாம் தவறாகும்.
இந்தப் பார்வை வந்தபிறகு உலகத்தில் வாழ்ந்தால் விருப்பு வெறுப்பற்ற
மனோநிலையில் எல்லா உயிர்களையும் பகை, நட்பு என்று பாராமல்
அன்பினால் அணைக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து
பார்க்க முடியாதபடி சாவு வந்து விட்டதே என்று வருந்துகிறான்.

     இந்த அறிவு பெறும்முன்னர்ச் சாவு வந்திருப்பின் வாலி
கவலைப்பட்டிருக்கமாட்டான். அற்புதமான இறையனுபவம் கிடைத்தும் அந்த
அனுபவத்தோடு இவ்வுலகிடை வாழமுடியாமல் போயிற்றே, வாழமுடியாமல்
போகிறதே என்பதுதான் அவனுடைய ஏக்கம். ஜென்மப் பகை என்ற
சுக்கிரீவன், அன்புத் தம்பியாகக் காட்சி அளிக்கிறான். காரணமின்றித்
தன்னைக் கொன்ற பகைவனாகிய இராகவன், வில்லறம் துறந்தான் என்று
ஏசப்பட்ட இராகவன் இப்பொழுது மூலப் பரம்பொருளாகக் காட்சி
அளிக்கிறான். இதனை அனுபவிக்கவும் உலகிடை உள்ள உயிர்களிடம்
சமநோக்கால் வந்த அன்பைப் பகிர்ந்துகொள்ளவும் வாயப்பில்லாமல்
போகிறதே (சாவு காரணமாக) என்பதே அவனுடைய ஏக்கம். இவ் அருளைப்
பெறாத சுக்கிரீவன் தனக்குத் துணையாக வந்த இராகவனை, இன்னும்
யாரென்று தெரிந்துகொள்ளாமல், தசரத குமாரன் என்றும், இலக்குவனின்
அண்ணன் என்றும், தன் நண்பன் என்றும், தன் பகையாகிய வாலியைக்
கொன்று தனக்கு ஆட்சியைத் தந்தவன் என்றும்தான் நினைக்கிறானே தவிர,
இத்தனையும் செய்த இராகவன் மூலப் பரம்பொருள் என்றோ பகை, நட்புகள்
கடந்த பரம்பொருள் என்றோ அவன் அறிந்துகொள்ளவில்லை.