பொற்கிண்ணம் எனறு அலால் அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்'' (திருவாசகம், திருச்சதகம் 92) என்று மணி வாசகப் பெருமான் கூறியதற்கு ஒப்ப, இளங்குழந்தையின் கையில் கிடைத்த பொற்கிண்ணத்தின் அருமைப்பாட்டைக்குழந்தை அறியாததுபோலச் சுக்கிரீவனும் இராமனின் அருமைப்பாட்டை அறிய வில்லையாதலால், இப்பாடலில் முதன் மூன்று அடிகளில் இராமன் யாரென்பதைத் தம்பிக்கு உணர்த்தத் தொடங்குகிறான். அவன் பரம்பொருள்தான் என்பதைக் காட்சி பிரமாணத்தாலும் நிறுவுவதற்காகத்தன் மார்பில் அம்பு எய்தமையைக் குறிப்பிடுகிறான். நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்ற பொருள்கள் எல்லாம் கற்கின்றது இவன்தன் நாமம்; கருதுவது இவனைக் கண்டாய்; பொன் குன்றம் அனைய தோளாய்! பொதுநின்ற தலைமை நோக்கின் எற்கொன்ற வலியே சாலும்; இதற்கு ஒன்றும் ஏது வேண்டா. (4074) காட்சிப் பிரமாணத்தால் இராகவன் யாரென்பதை நிறுவிய பிறகு, அவனுடைய பரம கருணையை, வள்ளன்மையை, மன்னிக்கும் தன்மையைப் பின்வரும் பாடலில் முதன் மூன்றடிகளில் குறிப்பிடுகிறான். தவறிழைத்தவர்களே மன்னிக்கப்பட்டு அவனருளைப் பெறுவர் என்றால், அவனுடைய திருவடியைப் பற்றிநின்று அவன் ஏவலைப் புரிபவர் பெறப்போகும் பேற்றைச் சொல்லவும் வேண்டுமோ என்று எடுத்துச் சொல்வதன் நோக்கம் தனக்குக் கிட்டாத வாய்ப்பு - அதாவது, அவனது அருகிலிருந்து அவன் குற்றேவலைச் செய்யும் வாய்ப்புத் தம்பிக்குக் கிடைத்திருக்கிறது என்று காட்டி, இச்சந்தர்ப்பத்தை அவன் நழுவவிடக்கூடாது என்ற ஆதங்கத்தோடு வாலி பேசும் பாடல் வருமாறு: கைதவம் இயற்றி, யாண்டும் கழிப்ப அருங்கணக்கு இல்தீமை வைகலும் புரிந்துளாரும், வான் உயர் நிலையை, வள்ளல் எய்தவர் பெறுவர் என்றால், இணை அடி இறைஞ்சி, ஏவல் செய்தவர் பெறுவது ஐயா! செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ?(4075) ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இராமனுக்குக் குற்றவேல் செய்யும் இந்த வாய்ப்பு - தனக்குக் கிட்டாத இந்த வாய்ப்பு - தம்பிக்கு எவ்வாறு கிட்டியது என்று சிந்தித்து, அதற்குரிய விடையையும் கண்டு கொள்கிறான் வாலி. சுக்கிரீவன் முன்னர்ச் செய்த நல் ஊழ் காரணமாகவே இந்நிலை அவனுக்குக் கிட்டியது என்பதை எடுத்துக்காட்டும் முகமாக, |