அருமை என், விதியினாரே உதவுவான் அமைந்தகாலை? இருமையும் எய்தினாய்; மற்று இனிச் செயற்பாலது எண்ணின், திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி, சிந்தை ஒருமையின் நிறுவி, மும்மை உலகினும் உயர்தி அன்றே (4076) என்ற சொற்களைக் கூறுகிறான். இத்துணை ஏதுக்களையும் காட்சிப் பிரமாணத்தையும் காட்டி, இராமன் யாரென்பதையும் அவனுக்கு அடிமை செய்து வாழ்வதே வாழ்வின் குறிக்கோள் என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறிய பிறகும் வாலியின் மனத்தில் நிறைவு ஏற்படவில்லை. தன் தம்பியாகிய சுக்கிரீவன் 'பெருங்குடி' மகன் என்பதையும், சலன புத்தி உடையவன் என்பதையும், இன்பத் துறையினில் எளியன் ஆவன் என்பதையும் நன்கு அறிந்த வாலி, இறுதியாக நேரிடையாகவே இடித்துக் கூறும் முறையில் தம்பிக்குச் சில சொல்ல முற்படுகிறான்: மதஇயல் குரக்குச் செய்கை மயர்வொடு மாற்றி, வள்ளல் உதவியை உன்னி, ஆவி உற்றிடத்து உதவுகிற்றி; பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும் சிதைவு இல செய்து, நொய்தின் தீர்வு அரும் பிறவி தீர்தி (4077) அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது, ஐயன் மரைமலர்ப் பாதம் நீங்கா வாழுதி . . . (4078) இவ்வளவு விரிவாகவும் அழுத்தமாகவும் உபதேசம் செய்த பிறகும் தன் தம்பி அதிகாரம் கைக்கு வந்தபிறகு என்ன ஆவான் என்பதை முன்னறிவு படைத்த வாலி நன்கு அறிந்திருந்தான். எனவே, தன் தம்பி தன் வாழ்வில் கிடைத்த பெறற்கரும் இந்த நல்வாய்ப்பை இழக்கும்படியான காரியம் யாதேனும் செய்துவிட்டால் நன்றி கொன்றவன் ஆய்விடுவான். அப்பொழுது அதற்குரிய தண்டனையை இராமன் வழங்க முற்பட்டால் யாரும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, உடன்பிறந்தானிடம் ஒப்பற்ற அன்பு கொண்ட வாலி இவனுக்கு உபதேசம் செய்வதைவிட இராமனிடமே இவனைக் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறான். அந்த நிலையில் வேண்டுகோளாக இராகவனிடம் கேட்பதைவிட வரமாகவே பெற்றுவிட வேண்டுமென்ற முடிவிற்குவந்த வாலி, இராகவனை நோக்கிப் பின்வருமாறு வரம் வேண்டுகிறான். ஒவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால், பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில், |