30

சூரியன் மரபுக்கும் ஓர் தொல் மறு
ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ!           (4029 - 3 . 4)

வாலியைப் படுத்தாய் அலை; மன் அற
வேலியைப் படுத்தாய் - விறல் வீரனே!              (4031 - 3, 4)

     இங்கே வாலியால் கேட்கப்பட்ட வினாக்கட்கு இராமன்மட்டும் அல்ல,
யாராலும் விடை கூற முடியாது என்பது உண்மைதான்.

     அடுத்தபடியாக, இராமன் வாலிபால் சார்த்திய குற்றச்சாட்டுகள் இரண்டு.
ஒன்று, அடைக்கலம் என்று வந்த தம்பியை அடித்துத் துன்புறுத்தியது;
இரண்டாவது, அவன் மனைவியைக் கவர்ந்தது. இவை இரண்டிற்கும் வாலி
கூறும் சமாதானம் பொருத்தமாகவே தோன்றுகிறது. இவற்றுள் தம்பி
மனைவியைக் கவர்ந்தது பெருங்குற்றமே என்பதில் ஐயமில்லை. ஆனால்,
அதற்கு வாலி கூறிய விடையும் சிந்திக்கத் தக்கதேயாம்.

ஐய! நுங்கள் அருங் குலக் கற்பின், அப்
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல்
செய்திலன் எமைத் தே மலர் மேலவன்;
எய்தின் எய்தியது ஆக, இயற்றினான்.                    (4046)

மணமும் இல்லை, மறைநெறி வந்தன;
குணமும் இல்லை, குல முதற்கு ஒத்தன;
உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால் . . . . .
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்.                  (4047)

     மனித சமுதாயத்தில்கூட அவ்வச் சமுதாயங்கள் உறையும் இடத்திற்கு
ஏற்ப ஒழுக்கங்கள் மாறுபடுகின்றன. அப்படி இருக்க, மனித சமுதாயத்தின்
நெறிமுறைகளை விலங்குச் சமுதாயத்திற்கு ஏற்றுவது சரியன்று என்ற வாலியின்
விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல், 'விலங்குகளேயாயினும் கற்றறிந்தவர்கள்
புத்தேளிரே;  எனவே, நீ செய்தது குற்றம்தான்' என்கிறான், இராகவன்.
இப்போது இவ்வாறு கூறும் இராகவன் வாலி - சுக்கிரீவப் போர்
தொடங்குவதற்கு முன்னர்ப் பேசிய பேச்சுகள் வேறானவையாகும்.
அண்ணனைக் கொல்லத் துணை தேடிய சுக்கிரீவனை வெறுத்து இலக்குவன்
மனம் நொந்துள்ளான். தமையனைப் பார்த்து, தன் உடன்பிறந்தவனைக்
கொல்ல ''யமனை அழைத்து வந்திருக்கும் இப்புல்லிய குரங்காகிய
இச்சுக்கிரீவன் தஞ்சம் பெறுதற்குத் தகுதியுடையவனோ'' (3976) என்று
இலக்குவன் கேட்க, அதற்கு விடையாக இராகவன் கூறிய சொற்கள் இப்போது
நினைவு கூரத்தக்கன ஆகும். 'ஐயனே! மனித சமுதாயத்தில் காணப்பட
வேண்டிய உறவுமுறையின் சிறப்பை, செய்வதறியாது நினைத்தபடி