33

''சும்மா இரு, சொல் அற'' என்ற நான்கு வார்த்தைகளே ஆகும்.
சாதாரண மக்களைப்  பொறுத்தமட்டில் 'ஒன்றும் பேசாதே சும்மா இரு' என்ற
பொருளைத் தரும் இந்த நான்கு சொற்கள் அருணகிரியின் ஆன்மீக
வளர்ச்சிக்கு ஒரு பாலமாய் அமைந்தது. அதே, போல மகாகவி பாரதியாரைப்
பொறுத்தமட்டில் மாங்கொட்டைச் சாமி என்ற சித்தர், ''முட்டால்
அழுக்குமூட்டையை நீ உள்ளே சுமக்கிறாய் நான் வெளியே சுமக்கிறேன்
போடா'' என்று கூறிய சொற்களே மந்திரமாக அமைந்து, பாரதியின்
வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தைத் தந்தன.  ''சும்மா இரு சொல் அற''
என்பதும், ''நான் வெளியே சுமக்கிறேன் போடா'' என்பதும் எப்பொழுது,
எப்படி மந்திரம் ஆகின்றன.? இச்சொற்களைக் கூறியவர்கள் நம்மைப் போன்ற
குறைமொழி மாந்தர்கள் அல்லர். அவர்கள் நிறைமொழி மாந்தர்களாவர்.
அவர்கள் ஆணையால் இந்தச் சாதாரணச் சொற்கள் மறைமொழியாக,
அதாவது, மாபெரும் சக்தி ஊட்டப் பெற்ற மந்திரங்களாக மாறிவிட்டன.
சக்தியூட்டப் பெற்ற மந்திரங்கள் எப்பொழுது அந்தச் சக்தியை
வெளிப்படுத்துகின்றன? இச்சொற்கள் சென்று சேரும் இடம் பக்குவப்பட்ட
ஆன்மாக்களாக இருப்பின் இவை மந்திரங்களாக மாறி ஆன்மாக்களை வழி
நடத்துகின்றன. ஓர் ஆன்மா நல்முறையில் பக்குவப் பட்டிருப்பின் எந்தச்
சொல்லையும் மந்திரமாக மாற்றி நிறைமொழி மாந்தராகிய குருமார்கள் அம்
மந்திரச் சொற்களையே உபதேசமாக மாற்றிவிடுவர்.  இந்த அடிப்படையைப்
புரிந்து கொண்டால் ம.ரா.போ. போன்றவர்களின் விளக்கத்தையும் ஏற்றுக்
கொள்ள முடியும். இந்த விளக்கத்தின் உயிர்நாடி பின் வரும்.

முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, ''முறை இலோயைத்
தென் புலத்து உய்ப்பென்'' என்று செப்பினன்; செருவில், நீயும்,
அன்பினை உயிருக்கு ஆகி, ''அடைக்கலம் யானும்'', என்றி
என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது' என்றான். (4059)

என்ற பாடலின் மூன்றாவது அடியில் உள்ளது. இம் மூன்றாவது அடியிலுள்ள
'என்றி' என்ற சொல்லை, 'என்பது கருதி' என்ற வினை எச்சத்தோடு
தொடர்புபடுத்தி 'என்று சொல்லி விடுவாயோ என்பது கருதி' என்றுதான்
அனைவரும் பொருள் கூறியுள்ளனர். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு
இப்பொருள் நியாயமானதே ஆகும். வாலியைப் பொறுத்த மட்டில் அவன்
காதுகளில் விழுந்த இந்தச் சொற்களுக்கு இப்படித்தான் பொருள்
கொண்டிருப்பான். காதில் விழுந்த சொற்களுக்கு அறிவு, பொருள்
செய்துகொள்ளும் முறை இதுதான். இவ்வாறு பொருள் கொள்ளும்போது
புறமனத்தில் இச்சொற்களின் பொருள் இவ்வாறுதான் படுகிறது.