34

     அப்படியானால், 'அன்ன கட்டுரை கருத்துள் கொண்டான்' என்ற
சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.  வாலியைப் பொறுத்தமட்டில்
முதலில் காதின் வழி புகுந்த சொற்கள் நாம் கூறும் அதே பொருளைத்தான்
தந்தன.  ஆனால் இந்த நேரத்தே வாலி அகமனத்தில் முழு வளர்ச்சி
பெற்றவன் ஆகி விட்டான். ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை என்ற இரண்டும்
பெற்று அந்த ஆன்மா வளர்ச்சியடைந்து குருவின் ஒரு சொல்லுக்காக (மந்திர
உபதேசத்திற்காக) காத்துக் கொண்டு நிற்கிறது. அந்தச் சொல் இலக்குவன்
என்ற குருவின் மூலமாக வழங்கப்படுகிறது. இப்பொழுது அந்த மூன்றாவது
அடியினைச் சிந்தனைக்குக் கொண்டு வந்தால் வேறு பொருள் தொனிப்பதைக்
காண முடியும்.

     அன்பினை உயிருக்கு ஆகி, ''அடைக்கலம் யானும்'' என்றி - இதன்
பொருள் வருமாறு: உடலைவிட்டுப் பிரிந்துபோகப் போகின்ற உன் உயிருக்கு
இவ் உடம்பு இருக்கும்பொழுதே நீ அன்புடையவனாக இருத்தல் வேண்டும்.
உடலோடு இருக்கும் வரை தான் உயிரின் வளர்ச்சியைக் காண முடியும்.
ஆகவே இப்பொழுது உன் உயிருக்கு நிறைந்த அன்பினைச் செலுத்துவாய்
ஆக. அப்படிச் செலுத்த வேண்டுமேயானால், அதற்கு ஒரேயொரு வழிதான்
உண்டு. கிடைத்தற்கரிய ஒரு சந்தர்ப்பம் உனக்குக் கிடைத்திருக்கிறது.
மூலப் பொருள் உன் எதிரே நிற்கின்றது. அப்பொருளினிடத்து ''அடைக்கலம்
யானும் என்றி''- யான் உன்னிடம் அடைக்கலமாக வந்துள்ளேன் என்பாயாக.
இவ்வாறு பொருள் கொள்கையில் 'என்றி' என்பது 'என்பாயாக' என்ற
வியங்கோள் பொருளில் பொருள் பண்ணப்பட வேண்டும். சாதாரண
முறையில்பொருள் செய்யம்போது 'என்று சொல்வாயேயானால்' என்று
பொருள்படும்.மந்திரமாகும் பொழுது 'அடைக்கலம் யானும் என்றி', 'யான்
உன் அடைக்கலம்என்று சொல் வாயாக' என்ற பொருளைத் தந்து
நின்கின்றது. இப்படிச்செய்வதால் அந்த மூலப்பொருளுக்கு நீ ஏதோ
உபகாரம் செய்துவிட்டாய்என்று நினையற்க.  அடைக்கலமாக உன்னைக்
கொடுப்பதால் அந்த மூலப்பொருளுக்கு எவ்வித லாபமும் இல்லை. 'தந்தது
உன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச் சங்கரா யார்கொலோ சதுரர்
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம்பெற்றேன்; யாது நீ பெற்றது என்பால்' என்ற
திருவாசகத் தொடர் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. அதன் எதிராக முழுப்
பயனும் உன் உயிருக்கே வந்து சேரும்என்ற பொருள் படும்படி 'அன்பினை
உயிருக்கு ஆகி' என்ற பொருளில்உயிர்க்கு அன்பினை ஆகி இருக்க
வேண்டுவாயானால் 'யானும் அடைக்கலம்என்றி' (என்பாயாக).