ஒரு சூழ்நிலையைத்தான் ''அன்பினை உயிர்க்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி' என்கிறான் இலக்குவன். வாலியின், 'மறைந்து நின்று கொன்றதேன்? என்ற வினாவிற்கு விடையைஎதிர்பார்த்துக் கொண்டு அவனுடைய அறிவும் புறமனமும் நிற்கின்றன.ஆனால் விடை வரவில்லை. அதற்குப் பதிலாக 'யான் உன் அடைக்கலம்என்றி' என்ற உபதேசம் வருகிறது. பழைய வாலியாக இருப்பின், 'என்வினாவிற்கு என்ன விடை' என்று மறுபடியும் கேட்டிருப்பான். 'மறைந்து நின்றுகொன்றது ஏன்.' என்ற வினா எந்த விநாடி வாலியின் வாயிலிருந்து புறப்பட்டதோ, அந்த விநாடியே பழைய வாலி மறைந்து ஆன்ம வளர்ச்சி பெற்ற வாலி அங்கே தோன்றிவிடுகிறான். இப்புதிய வாலிக்குப் பழைய வாலி கேட்ட அந்த வினா நினைவில்கூட இல்லை. அதற்கு விடையை எதிர் பார்க்கும்சூழ்நிலையும்கூட இல்லை. நயன, ஸ்பரிச தீட்சைகள் பெற்று வளர்ந்துள்ளவாலி என்ன செய்ய வேண்டுமென்பதை இலக்குவன் வடிவில் குரு அருள்நின்று 'யான் உன் அடைக்கலம் என்றி' (என்பாயாக) என்று உபதேசம்செய்கிறது. 'உயிர்க்கு அன்பினை ஆகி யானும் அடைக்கலம் என்றி' என்ற சொற்கள் புதிய வாலியின் அகமனத்தின் ஆழத்தில் சென்று பதிகின்றன. அடுத்த விநாடியே வாலி முழுமாற்றம் பெற்றவனாகிப் பேசத் தொடங்குகின்றான். இந்தக் கருத்தை நுண்மையாகக் கூறவந்த கவிஞன், 'அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்' என்று பேசுகிறான். அக மனத்தின் ஆழத்தில் சென்ற சொற்கள் அவனை அவியுறு மனத்தனாக மாற்றிவிட்டன என்பதையும் கவிஞன் தெரிவிக்கின்றான். அவியுறு மனத்தன் என்பதற்குத் துயரத்தால் முறிந்த மனத்தை உடையவன் என்று பிறர் பொருள் கூறியுள்ளனர். இவ்வாறு கூறுபவர் வாலியின் ஆன்மீக வளர்ச்சியை அறிந்து கொள்ளவில்லை என்பது தெளிவு. 'அவியுறு' என்பது 'அவித்தல் உற்ற' என்று விரிந்து தல் விகுதிபெற்ற தொழிற் பெயராக அவித்தல் என்று நிற்கும். நெல்லை அவித்தல் என்றால் முளை விடுகின்ற அதன் இயல்பை மாற்றுதல் என்ற பொருள் தந்து நிற்கும். அதுபோலப் பல்வேறு முரண்பாடுகளுக்கும் இடந்தருகின்ற மனத்தைத் தன்ஞானத்தால் அவித்துப் பதப்படுத்தி விட்டான் என்ற பொருளில்தான் அவித்தலையுற்ற மனத்தன் என்று சொல்லவந்த கவிஞன் அவியுறு என்று கூறுகிறான். இவ்வாறு கூறுவதால் வாலியின்மன நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை இரண்டு சொற்களால் கூறுகின்றான்.மனத்தை அவித்து விட்டான் என்பதால் பழைய வாலியினுடைய மனம் மீட்டும் புதிய வாலியிடம் தோன்றப் போவதில்லை என்பதையும் கவிஞன் விளக்கிவிடுகிறான். |