அவியுறு மனத்தனாக மாறிவிட்ட ஒருவன் சிறியன சிந்திக்க மாட்டான் என்று சொல்லத் தேவையில்லை. அப்படியிருக்க, சிறியன சிந்தியாதான் என்று கவிஞன் தரும் அடைமொழி வாலி முழு ஆன்மீக வளர்ச்சி பெற்று, சமதிருஷ்டி உடையவனாக ஆகிவிட்டான் என்று உடன்பாட்டு முகமாகக் கூறாமல் கவிஞன் தனக்கே உரிய பாணியில் சிறியன சிந்தியாதான் என்று கூறுகிறான். 'அன்ன கட்டுரை' என்பதற்கு இலக்குவன் கூற்று என்று பொருள் கொள்ளாமல் இராமன் சொற்கள் என்று பொருள் கொண்டு வாலியின் மனமாற்றம் இனிப் பேசப்படுகின்றது. நகைப்பைத் தரக் கூடிய இலக்குவன் விடையைப் பேரறிவாளனாகிய வாலி மனத்துள் வாங்கிக்கொண்டவுடன் மனம் மாறினான் என்ற கூற்றை மறுத்து, இனி வரும் பகுதியில் வாலியின் மனமாற்றத்திற்குக் காரணம் ஆயப்படுகின்றது. அவ்வாறாயின் 'அன்ன கட்டுரை' என்ற தொடருக்கு வேறென்ன பொருள் கூற முடியும்? இலக்குவன் விடையைத் தொடர்ந்து இப்பாடல் வருதலின் 'அன்ன' என்றசுட்டுச் சொல்லுக்கு இவ்வாறு பொருள் கூறினர். உண்மையில், 'அன்ன' என்றசுட்டு இராமனுக்கும் வாலிக்கும் நடந்த வாதங்களையும் அதில் இராமன் கூறிய விடைகளையும் மனத்துட்கொண்டான் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். இராமனுடன் வாதிடுகின்றவரையில் இராமன் கூறுகின்ற சொற்கள் வாலியின் காதுகளுள் புகுந்து அவன் புற மனத்திலேயே தங்கிவிட்டன. உடனே எதிர்வாதம் செய்ய வேண்டும் என்ற கருத்தோடு இராமன் சொற்களை வாலி கேட்டான் ஆதலின் இதுவரை, அச்சொற்கள் 'மனத்தில்' (புறமனத்தில்) பதிந்தனவேயல்லாமல் 'மனத்துள்' (அகமனத்தில்) புகவே இல்லை. வாதப்பிரதிவாதங்கள் அனைத்தும் ஓய்ந்து விட்ட நிலையில் இராமனுடைய சொற்கள் வாலியின் மனத்துள் (அகமனத்துள்) செல்ல முற்பட்டன. அவை செல்லுமாறு வாலியின் மனநிலை மாற்றம் கொண்டுவிட்டது. வாலியின் இந்த மனமாற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை முன்னர் விரிவாகக் கண்டோம். வாலியின் புறமனம், அவன்கூர்த்த அறிவு, வாய் என்ற மூன்றுமே இராமனுடன் வாதம் செய்து, அவன் தவறிழைத்தான். வில்லறம் துறந்தான் என்பவற்றை நிலை நாட்டுவதிலேயே முற்பட்டிருந்தன. எனவேதான் இராமன் கூறிய கட்டுரைகள் அக மனத்துக்குள் போகவில்லை. இந்த வாதம் நடைபெறுகின்ற நேரத்திலேயே வாலியை அறியாமல், அதாவது அவனுடைய புற மனம், அறிவு என்பவற்றிற்கு அப்பாற்பட்டு அக மனத்தின் ஆழத்தில், உணர்வுகளின் அடிப்படையில், ஓர் வளர்ச்சி, செடியாக மரமாக முளைத்துக் கொண்டிருந்தது என்று முன்னர்க் |