பிறகு அவர் பெற்ற அனுபவத்தைப் பிழிந்து தரும் பாடல்கள் திருவாசகம் ஆகும். அறநூற்றுச் சொச்சம் பாடல்களில் முப்பது இடங்களுக்குமேல் 'நாய்க்குத் தவிசிட்டு' என்றும் 'நாயில் கடையாய்க் கிடந்த அடியேன்' என்றும் முதலாகத் தம்மை நாய் என்று அப்பெருமான் கூறுவதைக் காணலாம். அப்பாடல்களின் தாக்கம் கம்பநாடனுக்கு ஏற்பட்டது போலும். எனவே, மனம் மாறிய வாலி பேசும் முதல் பேச்சு 'நாய் என நின்ற எம்பால்' என்பதாகும். வான்மீகத்திலோ, ஆத்யாத்மம் முதலிய இராமாயணங்களிலோ வாலி என்ற பாத்திரம் இவ்வாறு படைக்கப்பட வில்லை. எனவே, மூலநூலிலிருந்து வாலியை எடுத்துக்கொண்டாலும் கம்பனுடைய வாலி ஈடு இணையற்ற (உலக இலக்கியங்களில் இடம் பெறத்தக்க) பாத்திரமாகப் படைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இப்படலத்திலும், இதனையடுத்துள்ள கார்காலப் படலத்திலும் இரண்டு பாடல்கள் பல்வேறு வகையான கருத்து வேற்றுமைகளுக்கு இடம் தருவனவாகும். வாலியைப் பற்றி இவ்வளவு விரிவாக அறிந்தபிறகு, வாலிக்கு அறிவு தந்தவனும், இராமன் என்னும் வடிவத்தில் மறைந்து நிற்பவனும் ஆகிய பரம்பொருளைக் கம்பன் எப்படிக்காட்டுகிறான் என்பதை அறிய இவ் இரண்டு பாடல்களும் உதவும். இராமகாதை முழுவதிலும் இலக்குவன், பரதன், கவந்தன், சவரி, வாலி, அனுமன், வீடணன், சரபங்கன் ஆகிய அனைவரும் இராமனை யாரென்று அறிந்திருந்ததாகக் கவிஞன் பாடுகிறான். ஆனால், இராமனைப் பொறுத்தமட்டில் தான் யாரென்பதை அறிந்து கொண்டதாகவோ, அறிந்து பேசியதாகவோ கம்பன் ஒரு குறிப்பும் தரவில்லை. நாகபாசப் படலத்தில் வரும் கருடனுக்கு இராமன் நன்றி பாராட்டுவதைக் கண்டு நாணமுற்ற கருடன், 'ஐயனே! உன்னை யார் என்று நான் அறிவேன். ஆனால் இப்பொழுது என்னை யாரென்று நீ அறியமாட்டாய்' என்று பேசும்பகுதி நாம் முன்னர்க் கூறிய கருத்துக்கு அரண் செய்வதாகும். மனிதனாக, 'நடையில் நின்றுயர் நாயக'னாக வாழ்ந்து காட்டும் இராகவன் ஒன்றிரண்டு இடங்களில் மனிதனாகவே நடந்துகொள்வது கம்பனது படைப்பு முறைக்கு ஏற்றதாகும். இலக்குவன் தடுத்தும் மாய மான்பின்னே சென்றதும் சூர்ப்பணகையிடம் 'அந்தணர் பாவை நீ அரசரின் வந்தவன் யான்' (2780) எனப் பேசுவதும் அவன் மனிதனாக நடந்து கொள்ளக் கூடிய பகுதி ஆகும். அதேபோன்று வாலி வதையிலும் அவன் நடந்துகொள்ளவதாக நினையவேண்டியுள்ளது. சவரியின் அறிவுரைப்படி சுக்கிரீவன் இருக்கும் இடம் வந்த இராமனை முதன் முதலாய்ச் சுக்கிரீவன் சந்திக்கிறான். அவனிடம் இராமன் பேசிய முதல்வார்த்தை, |