அவன் வரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தினான் என்று ஒரு நிகழ்ச்சியைக் கூட அனுமனாலோ, சுக்கிரீவனாலோ சொல்ல முடியவில்லை. இந்த நிலையில் உண்மையான தர்மசங்கடத்தில் அகப்பட்டுக்கொள்கிறான், தசரத குமாரன். தம்பியிடம் யோசனை கேட்கலாம் என்றால், தொடக்கத்தி லிருந்தே சுக்கிரீவன் செயலை - அண்ணனைக் கொல்ல ஆள் தேடும் சுக்கிரீவன் செயலை வெறுப்பவனாகவே உள்ளான். ஆகவே, இராமன் தர்மசங்கடம் வலுவாகி விட்டது. சவரி முதலானவர்கள் தன்னைச் சுக்கிரீவனிடம் அனுப்பியதில் ஏதோ ஒரு காரணம் இருப்பதை இராகவன் நினைக்கிறான். பிராட்டியை மீட்க வாலி ஒருவனே போதுமானதாக இருக்க, அவனிடம் போகச் சொல்லாமல் அஞ்சி வாழும் அப்பாவியாகிய சுக்கிரீவனிடம் போகச்சொல்லியதற்குத் தக்கதொரு காரணம் இருத்தல் வேண்டும் என்பதைச் சிந்திக்க இராகவன், சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவிற்கு வந்ததில் தவறொன்றும் இல்லை. அதைக் காப்பாற்ற வேண்டுமாயினும் வாலியின் வரம் மலைபோலக் குறுக்கே நிற்கின்றது. என்ன செய்வது? இராகவனுடைய வாழ்க்கையில் இதுபோன்ற தர்மசங்கடம் முன்னரும் எழுந்துள்ளது. ஆனால், அந்தத் தர்மசங்கடத்தி லிருந்து விடுவிக்க ஒரு பெருந்துணை இருந்தது. முனிவர்களின் யாகங்களைக் காப்பாற்றத்தான் விசுவாமித்திரனுடன் செல்கிறான் கரிய செம்மல். 'யார் தடையாக இருப்பினும் அழிப்பேன்' என்ற உறுதியுடன் வரும், ''போர் எனில் புகலும் புனைகழல்'' மறவனாகிய இராகவன் எதிரே சற்றும் எதிர்பாராமல் தாடகை என்னும் பெண் வருகின்றான். அம்பில் கைவைக்கப்போன இராகவன் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டான். அவன் மனநிலையைக் கூறவந்த கவிச் சக்கரவர்த்தி ''பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைத்தான்'' (374). அவள் பெண்ணல்லள், அவளைக் கொல்வது நியாயம் என்பதற்கு வலுவான காரணங்களைக் காட்டிச் சமாதானம் கூறியபோதும்கூட, இராகவன் தன் தர்ம சங்கடத்திலிருந்து மீள விசுவாமித்திரனைக் கருவியாக ஆக்கிக்கொள்கிறான்: ஐயன் அங்குஅது கேட்டு, 'அறன் அல்லவும் எய்தினால், ''அது செய்க!'' என்று ஏவினால், மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு செய்கை அன்றோ, அறம் செய்யும் ஆறு' என்றான் (383) என்ற இப்பாடல் 'உன் உரையை வேதம் என்று கருதி இதனைச் செய்கிறேன்' என்று கூறுவதால், இத்தரும சங்கடத்தி லிருந்து எவ்வாறு மீண்டான் என்பதைஅறிய முடிகிறது. மேலும், தாடகை |