47

உள்ளனர் நிரம்பினான் என்பது அனைத்துப் பண்புகளும், ஆட்சித்திறமையும்
உள்ளவனாகிய வாலியைக் குறிப்பதாகும். அவனால் ஆட்சி செய்யப்பெற்ற
அரசு எவ்விதக் குறைவும் இல்லாத நிறை அரசு என்று கூறுகிறான் இராகவன்,
எல்லாச் செல்வங்களும் எல்லையில்லாமல் நிறைந்துள்ள அவ் ஆட்சியை,
மற்றோர் தலைமகனாகிய சுக்கிரீவன் வலிதிற்பற்றித் தனதாக்கிக் கொண்டான்.
இவன் ஆட்சி செய்யும்பொழுது பழைய ஆட்சிபோலில்லாமல் நன்மையோடு
தீமையும் கலந்தே தோன்றும், அதாவது மக்கள் பழைய ஆட்சியின்
சிறப்பையும், புதியவன் ஆட்சியையும் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள் ஆதலினாலும்
நிரம்புவான் செய்த நல்லரசு போல நிரம்பாத புதியவன் செய்த ஆட்சி நன்றி
அமையாது ஆதலாலும் அங்கே மனக் கசப்பும் புரட்சியும் தோன்றக் கூடும்.
(அரும்புவ நலனும் தீங்கும்). ''அதனைத் தடுக்க வேண்டுமானால்
அமைச்சருக்குரிய பண்புகள் அனைத்தும் நிரம்பிய பண்புள்ளவனும், எதிரது
போற்றும் நுண்மாண் நுழைபுலமும் உடையவனும், சொல்லின் செல்வனும்,
தரும வடிவினனும் ஆகிய உன்னைப் போன்ற அமைச்சர்கள் இருந்து
அப்பாரத்தைத் தாங்குவதே முறைமையாகும்'' என்று அனுமனிடம் கூறும்
பொழுது, வாலியின் ஆட்சிக்கு இராகவன் தரும் நற் சான்றிதழ் ''நிரம்பினான்
ஒருவன் காத்த நிறை அரசு'' என்பதாகும்.

     வாலியின் பெருமை தெற்றெனத் தெரியவே, இராகவன் மனம்
கசிவதாயிற்று, வில்லறம் துறந்து ஒரு சாதாரணக் குரங்கைக் கொல்வது வேறு.
வாலியைக் கொன்ற செயலுக்கு இராகவன் வருந்தியிருத்தல் வேண்டும்.
அவ்வருத்தத்தைப் போக்கிக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று
வாலியின் உயிரை மீட்டுத்தருவதாகும். ''ஆருயிர் துறக்கல் ஆற்றேன்'' (3810)
என்று சொல்லிக்கொள்ளும் சுக்கிரீவனைப் போல வாலிக்கு உயிர்மேல்
ஆசையில்லை என்பதை 'வீட்டரசு எனக்கு நல்கினான். எம்பி' என்ற
வாலியின் கூற்றால் இராமன் நன்கு அறிந்துகொண்டான். அப்படியானால் தன்
செயலுக்கு வருந்தும் மனநிலையை எவ்வாறு வாலிக்குத் தெரிவிப்பது என்று
எண்ணம் உற்றான் போலும். இராகவன் தன்கருத்தை வாலிக்கு வெளிப்படுத்த
வேண்டும் என்று நினைத்து அதனைச் செயலாற்ற நினைப்பதற்கு முன்னர்
நிகழ்ச்சிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்றுவிட்டன.  அதன் முடிவில்
வாலி ''வானுக்கு அப்புறத்து உலகன்' (4093) ஆகப்போகிறான். எனவே,
இராமன் தன்மனத்தில் தோன்றிய எண்ணத்தை நிறைவேற்ற வகையறியாது
மனவருத்தத்தோடும் மயக்கத்தோடும் இருக்கின்ற நிலையில், வாலியின்
மைந்தனாகிய அங்கதன் அடைக்கலப் பொருளாக இராமனிடம்
ஒப்புவிக்கப்படுகிறான்.  தந்தையாகிய வாலியிடம் சொல்ல வேண்டியதை
மைந்தனிடம் எவ்வாறு சொல்வது? தன் மனநிலையைச் சில