சொற்களில் கூறவேண்டும். வாலியிடம் கூறியிருந்தால் அதன் உட்பொருளை அவன் அறிந்துகொண்டிருப்பான். ஆனால் முன்பின் அறியாத சிறுவனாகிய அங்கதனிடம் அதுபற்றிப் பேசுதல் முறையன்று என்றாலும், ஏதாவது ஒரு வகையில் தன் செயலுக்குக் கழுவாய் தேட வேண்டும் என்று நினைத்த இராகவனுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றுகிறது. ஓரளவு பழகியவனும், தம்பியருள் ஒருவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவனும், தன்னால் தாரமும், தலைமையும் பெற்றவனு மாகிய சுக்கிரீவனிடத்தில்கூடக் கூற முடியாதவைகளை, செய்ய முடியாதவொரு செயலை, முன்பின் தெரியாதவனும், சில விநாடிகளுக்கு முன்னரே தன்பால் ஒப்புவிக்கப்பட்டவனு மாகிய அங்கதனிடம் கூறுகிறான்; ஒப்பற்ற ஒரு செயலைச் செய்கிறான். இராகவன் தன் உடைவாளை அங்கதனிடம் தந்த 'நீ இது பொறுத்தி' என்று கூறியதாகக் கவிஞனின் பாடல் அமைந்துள்ளது. இச்செயலைச் செய்கின்ற விநாடியில் வாலி உயிரைவிடும் நிலையில் உள்ளான் என்பதையும் அறியத்தகும். இதனைக் கவிஞன், ஒரு நாடகமுறையில் ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறான். நாடகப் பாத்திரங்கள் மூவர். முக்கியப் பாத்திர மாகிய இராகவன், எல்லாவற்றையும் கண்டு கேட்டுக்கொண்டே சில விநாடிகளில் உயிர்த் துறக்கப் போகும் வாலி, நடந்தது இன்னதென்று புரிந்துகொள்ள முடியாமல் குழப்பமானவொரு மனநிலையில் இராமனிடம் அடைக்கலப் படுத்தப்பட்ட சிறுவன் அங்கதன். குழம்பி இருக்கின்ற சிறுவனிடம் ஏன் இது நடைபெறுகிறது என்று அறிந்துகொள்ள முடியாத மனநிலையில் உள்ள அங்கதனிடம் தசரத குமாரன் தன் வாளை நீட்டி ''நீ இது பொறுத்தி'' என்று சொல்வதாகவும், இதனைப் பார்ததுக் கொண்டே வாலி உயிர் நீத்ததாகவும் பாடல் அமைந்துள்ளது. தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும் பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்; என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி, அந்நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான். (4093) பல கருத்து வேறுபாடுகளுக்கு இடம் தரும் பாடலாகும் இது. 'பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான்' என்ற தொடருக்கு 'இதனை வைத்துக் கொள்' என்றே பலரும் பொருள் கூறியுள்ளனர். பொறுத்தி என்ற சொல்லுக்கு வைத்துக்கொள் அல்லது ஏற்றுக்கொள் என்றுபொருள் கொள்வது பொருத்தமாகப் படவில்லை. இவர்கள் கருத்துப்போல் நீ இதை வைத்திருப்பாயாக என்ற பொருளில் இராகவன் கூறியிருந்தால் 'உலகம் ஏழும் ஏத்தின' என்று கம்பன் அடுத்தாற்போல் கூறுவதற்குப் பொருளே இல் |