பிழைக்கு அவன் சார்பாக வசிட்டன் 'நீ பொறுத்தி' என வேண்டுகிறான். இராகவன் செய்த செயல் அறியாமையால் செய்ததன்று; அறிந்தே செய்ததாகும். பிள்ளைப் பாசம்போல அங்கே பாசம் எதுவும் இல்லை. அவதார நோக்கம் நிறைவேறவேண்டும் என்று அக மனத்தின் அடியில் தோன்றிய எண்ணத்தை நிறைவேற்றவே வேறு நின்று எவ்விடத் துணிந்தான். அது வில்லறம் துறந்த செய்கை என்பதை உணர்ந்தே செய்தானாகலின், அங்கதனிடம் 'நீ இது பொறுத்தி' என கேட்டுக்கொள்கிறான். பெரியதொரு நன்மை பெறவேண்டிச் சிறிய தவறுகளைச் செய்வது அரச நீதிகளுள் ஒன்று, என்றாலும் நடைபெற்ற பிறகு 'நீ இது பொறுத்தி' என்று தசரத குமாரன் கூறுவதால் அவன் பெருமை மலையை விட உயர்ந்துவிடுகிறது என்பதை மனத்திற் கொள்ள வேண்டும். இதனையடுத்து அரசியற் படலத்தில் காணப்படும் மற்றொரு பாடலும் பலரைக் குழப்புவதாக உள்ளது. அனைத்தும் முடிந்த பிறகு சுக்கிரீவனுக்கு முடிசூட்டும் பணியும் நிறைவேறிவிட்டது. அந்த நிலையில்இராம இலக்குவர்களைக் கிட்கிந்தைக்கு வருமாறு சுக்கிரீவன் அழைக்கிறான். அப்போது இராமன் பல்வேறு காரணங்களைக் காட்டி, கிட்கிந்தையில் வந்து அரச போகங்களை அனுபவிக்க முடியாத நிலையில் தான் இருப்பதைக் கூறுகிறான். மேலும், மற்றோர் மலையிடைச் சென்று தங்கித் தவம் மேற்கொள்ளப்போவதாகவும் கூறுகிறான். அவன் கூறிய பல்வேறு காரணங்களுள் ஒரு காரணத்தை அறிவிக்கும் பாடல் வருமாறு: இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும், போரின் வில்அறம் துறந்தும், வாழ்வேற்கு, இன்னன மேன்மை இல்லாச் சில்அறம்; புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு, நல்அறம் தொடர்ந்த நோன்பின், நவை அற நோற்பல் நாளும் (4137) இப்பாடலில், தான் தவம் மேற்கொள்வதற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறான், இராமபிரான். முதலடியில் முதல் தவற்றைப் பேசுகிறான். இல்லறம் துறந்து துறவை மேற்கொள்ளாமல் இல்லறத்திலேயே இருப்பவர்களின் முதற் கடமை தன்னை நம்பி வந்த மனையாட்டியைக் காப்பதாகும். அதுதான் இயல்பானது. அதைத் தான் செய்யவில்லை என்பதை 'இல்லறம் துறந்திலாதோர் இயல்பை இழந்தேன்' என்று முதற்கண் கூறுகிறான். இரண்டாவதாக, போரில் 'வில் அறம் துறந்தும் வாழ்வேன்' என்பதாகும். இது வரை கர தூடணர்கள் வதை தவிர இராகவன் வில்லெடுத்துப் போர் செய்தது வாலியினிடமே ஆகும். கர தூடணர் வதத்தில் வில் அறம் துறக்கும் வாய்ப்பு ஏதும் ஏற்படவில்லை. வாலி வதத்தில்தான் |