53

மனோர்க்காகத் தங்கள் வில் அறம் துறந்த வீரன்' (4014) என்ற அடியில்
உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகமிக அழமான பொருட் சிறப்பைப் பெற்று
விளங்கக்காணலாம். எம்மனோர்க்காக என்ற சொல்லினால் இராமன் செயலில்
தன்னலம் என்பது கடுகளவும் இல்லையென்பதை வாலி உணர்ந்து பேசுகிறான்.
அடுத்து வரும், 'தங்கள் வில் அறம்' என்னும் சொல் நன்கு சிந்திக்கத்தக்கது.
குரங்குச் சண்டையில் கடித்தல், கையை மடக்கிக் குத்துதல், எட்டி எறிதல்
என்பன போன்ற பலவகை உண்டேனும் வில்லெடுத்துப் போர் செய்தல்
இல்லை. வானரங்கள் கையாண்ட கருவிகள் இவையென்பதைச் சுட்டும் ஒரு
பாடல் உள்ளது:

பல்கொடும், நெடும் பாதவம் பற்றியும்
கல்கொடும் சென்றது - அக் கவியின் கடல்.

எதிர்த்துப் போரிடும் அரக்கர் சேனை கையாண்ட கருவிகளை மேற்குறித்த
பாடலின் பின் இரண்டு வரிகள் குறிக்கின்றன.

வில்கொடும், நெடு வேல் கொடும், வேறு உள
எல்கொடும் படையும் கொண்டது - இக் கடல் (7035)

எனவே, வில்லெடுத்துப் போர் செய்தல் என்பது மனிதர்களுக்கும்
தேவர்களுக்கும் அரக்கர்கட்கும் உரியதாகும் என்பதை வாலி ஒப்புக்
கொள்கிறான்.  அரக்கர் விற் போரில் அறவழி நின்று போர் புரிவர் என்று
கூறமுடியாது. இந்திரசித்தன் மறைந்து நின்று போர் புரிவது இதற்கு
எடுத்துக்காட்டாகும்.  எனவே, அவர்களைப் பொறுத்தமட்டில் வில் அறம்
என்ற ஒன்றும் கிடையாது.  தேவர்கள் யுத்தத்தைப் பற்றி நாம் அறிய
முடியாது.  எனினும், அவர்களும் அறவழி நின்றே போர் புரிவர் என்று
கொள்ளலாம். எனவே, எஞ்சி நிற்பது மனிதர்கள் செய்யும் விற்போர்மட்டுமே
யாகும். தாங்கள்மட்டுமே செய்யும் விற்போருக்குச் சில சட்டதிட்டங்களை
வகுத்துக்கொண்டு, இது தான் அறவழி நின்று செய்யப்படும் விற்போர்
ஆகுமென்று உயர்ந்த பண்புடைய மனிதர்கள் வகுத்துக்கொண்ட சில
அறவழிகள் உண்டு.  அதனைத்தான் இங்கே வாலி 'தங்கள் . . . வில் அறம்'
என்ற சொற்களில் கூறுகின்றான்.  அப்படிக் கூறும்பொழுதுகூடக் கேவலமான
குரங்குகளின் பொருட்டாக ஒரு மாமனிதன் (இராமன்) வில் அறத்தைத்
துறந்தானே என்ற கழிவிரக்கத்தில்தான் பேசுகிறான் என்றால், சுத்தவீரனாகிய
வாலி இராமனைக் குறைத்து எடைபோடவில்லை. தன் வாயாலேயே வீரன்
என்ற அடைமொழியை இராமனுக்குத் தருகின்றான்.  மனக் கசப்பிலும்,
சொல்லப்படுகின்ற நிலையிலும், கழிவிரக்கத்திலும் ஒரு சுத்த வீரன் மற்றொரு
சுத்த வீரனை மதித்துப் பேசும் இயல்பை வாலியின் கூற்றில் காண்கிறோம்.