இதுகாறும் கூறியவற்றால் வில் அறம் துறந்த வீரன் என்று எந்தப் பொருளில் வாலி கூறினானோ அதே பொருளில்தான் 'வில் அறம் துறந்து வாழ்வேற்கு' என்று இராகவனும் கூறுகிறான் என்பது தெளிவாகும். காப்பிய அமைதியில் பாத்திரப் படைப்பு, உரையாடல், நிகழ்ச்சிகள் அமைப்பு என்பவற்றை வைத்துக் கொண்டு செய்யப்படும் திறனாய்வாகும் இது. இவ்வாறு கூறுவதனால் இராமன் புகழுக்கோ அவன் பரம்பொருள் என்று கூறுவதற்கோ எவ்விதக் குறைபாடும் இல்லை என்பதை அறிதல் வேண்டும். இத்தனையையும் அனுமன் கூற்றாகக் கவிதையில் கூறிய கம்பநாடனே ''மூலமும் நடுவும் ஈறும் இல்லது. ஓர் மும்மைத்து ஆய, காலமும் கணக்கும் நீத்த காரணன், கைவில் ஏந்தி அயோத்தி வந்தான்''(5884) என்று கூறுவதால் இராமன் புகழுக்கு இத்திறனாய்வு எவ்வித இழுக்கையும் தராது என்பது தெளிவு. மேலும் கவிஞனே இராமன் பரம்பொருள் என்பதை 'வான்நின்று இழிந்து வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும் ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன்' என்று அயோத்தியா காண்டக் கடவுள் வாழ்த்திலும், ''அலங்கலில் தோன்றும் பொய்மை அரவு என, பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் கலங்குவது எவரைக் கண்டால்? அவர் என்பர்-கை வில் ஏந்தி இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவர்'' என்று சுந்தர காண்டக் கடவுள் வாழ்த்திலும் குறித்தவாறு காண்க. கிட்கிந்தா காண்டத்தில் உலகமகா காப்பியங்களில் காணப்பெறாத, காண முடியாத இரண்டு பாத்திரங்கள் பேசப்படுகின்றன. ஒன்று, அனுமன், இரண்டாவது வாலி, வாலியைப் பற்றி விரிவாகக் கண்ட பிறகு அனுமனைப் பற்றி இக்காண்டத்தில் உள்ள அளவிற்குச் சிந்திப்பது பொருத்தமான தாகும். வாலியைப் பொறுத்தமட்டில் வெறும் குரங்காகக் காணப்படும் வான்மீக வாலி, கம்பன் கைபட்டு ஒப்புயர்வின்றி விளங்கக் காண்கிறோம். அனுமனைப் பொறுத்தவரையில் கம்பன் அவனுக்கு ஏற்றிச் சொல்லும் அனைத்துக்குணங் களையும் செயல்களையும் வால்மீகியே ஓரளவு கூறியுள்ளார்.என்றாலும், அப்பாத்திரத்திற்கு வான்மீகி தராத புதிய வடிவத்தைக் கம்பநாடன் தருகிறான். தொண்டு, அதாவது உயிர்களுக்குப் பணிபுரிதல் என்றவொரு கொள்கை சங்ககாலம் தொட்டுத் தமிழினத்தில் ஊறி வந்த ஒன்றாகும். தன்னலம் அற்றுப் பிற உயிர்களுக்குத் தொண்டு செய்வதையே தன் குறிக்கோளாகக் கொண்ட இப்பெருமக்களைப்பற்றிக் கூற வந்த புறநானூறு ''தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கு என முயலுநர்'' (182) என்று இலக்கணம் வகுக்கின்றது. தொண்டு செய்பவர்களுக்குத் தன்னலம் |