மீண்டும் பிறவாத வீடுபேற்றை நல்க வல்லவர்கள்' என்பதே இவ் அடிகளின் பொருளாகும். இது கொஞ்சம் விந்தையான முடிவே ஆகும். இங்குக் கூறப்பட்ட செயல்களைச் செய்ய வல்லவன் பரம்பொருள் ஒருவனேயன்றி, இந்திரன் முதலிய தேவர்களாலும் இயலாது என்பதை அறிதல் வேண்டும். அப்படியிருக்க எதை வைத்துக்கொண்டு பேரறிஞனான அனுமன் இந்த முடிவுக்கு வருகிறான்? அவன் கண்டதாக முன் பாடல்களில் கூறப்பட்டுள்ள மெய்ம்மைகள் அனைத்தும் மனிதருள் தலைசிறந்த மாமனிதர்கள் என்ற முடிவிற்கு வரவைத்ததே தவிர, அவர்களைப் பரம்பொருள் என்று நினைப்பதற்கு எவ்வித ஆதாரமும் தரவில்லை. புறத்தே நிகழும் இந்நிகழ்ச்சிகளைமட்டும் வைத்துக்கொண்டு பரம்பொருள் என்று முடிவிற்கு வருவது ஆதாரம் அற்றதாகும். ஆனாலும், அம்முடிவுக்கு அனுமன் வந்துவிட்டான் என்று கூறியவுடன், நம் மனத்தில் எழும் ஐயத்தைப் போக்க இப்பாடலின் பின்னிரண்டு அடிகளில் கவிஞன் விடை கூறுகிறான். இவர்கள் பரம்பொருள்; மானிட வடிவம் தாங்கிய பரம்பொருள் என்ற முடிவிற்கு அனுமன் வந்த காரணம் இதோ வருகின்றது: என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்; அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன் (3763) ஓர் ஆன்மாவின் எதிரே பரம்பொருள் காட்சி அளிக்குமேயானால் என்பு உருகுதலும், மனத்தில் அளவில்லாத காதல் வளர்தலும் மட்டுமே இலக்கணங்கள் ஆகும். இந்த விளக்கத்தை அனுபவ ஞானிகளாகிய மணிவாசகர் போன்றோரின் நூல்களில் பரக்கக் காணலாம். ''அற்புதமான அமுத தாரைகள், எற்புத் தொளைதொறும் ஏற்றினை ஏற்றினை'' (திருவாசகம் திருவண்டபக் 174) என்பது திருவாசகம். மறைந்து நின்று தூரத்தில் கண்டபோதேகூட இராகவன் யாரென்பதை அறிவாலும் உணர்வாலும் அறிந்துகொண்டான் அனுமன் என்கின்றான் கவிஞன். இந்தப் பர ஞானம், அனுபவத்தின் வெள்ளம் அனுமனுடைய முகத்திலும் படர்ந்திருக்க வேண்டுமென்று நினைய வேண்டியுள்ளது. கண்ட சில மணித்துளிகளிலேயே அனுமனை எடைபோட்டு ''நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும், கோட்படாப் பதமே ஐய! குரக்கு உருக் கொண்டது'' (3783) என்று பரம்பொருளின் அவதாரமாகிய இராகவனே சான்றிதழ் வழங்குகிறான் என்பதையும் கருத வேண்டும். இவ் அனைத்தும் நடைபெற்றிருக்கக் கூடிய நேரம் சில மணித்துணிகளே ஆகும். தொண்டன் பரம்பொருளையும் பரம்பொருள் தொண்டனையும் இனங்கண்டுகொள்கிற மாபெரும் நிகழ்ச்சி, நடைபெற்று முடிந்துவிடுகிறது. |