18

முடியாது. பிராட்டியின்தவ அழகை இராவணன் காண முடியாமைக்குக்
காரணம் புலனடக்கம் என்பது அவனிடத்தில் இல்லை. புலன்களின்
வெறியாட்டத்தில் சிக்கிச் சுழல்பவன் அவன். எனவே, அவனால் பிராட்டியின்
வடிவழகைக் கடந்து தவ அழகைக் காணும் வாய்ப்பே இல்லை. அனுமனைப்
பொறுத்த மட்டில் புலனடக்கத்தின் மொத்த உருவாக வாழ்ந்தவனாதலின்,
பிராட்டியின் வடிவழகைக் காணாது தவ அழகையே கண்டான். அதனாலேயே
'தவம் செய்த தவமாம் தையல்' என்று கூறுகிறான்.

     சுந்தர காண்டத்தின்14 படலங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் வீர
சௌந்தரியம், பக்தி சௌந்தரியம், புலனடக்க சௌந்தரியம் ஆகிய மூன்றும்
மிளிரும் சுந்தரனாகக் காட்சியளிக்கிறான். பிராட்டியைப் பொறுத்தவரை காட்சி,
உருக்காட்டு, சூடாமணி ஆகிய மூன்று படலங்களில் தவ சௌந்தரியத்துடன்
காணப்படுகிறாள். எனவே, இக்காண்டம் சுந்தர காண்டம் என்று பெயர்
பெறுவதற்கு முறையே அனுமனும் பிராட்டியும் காரணமாகின்றனர்.

     சுந்தர காண்டம்,கடல் தாவு படலத்தில் தொடங்கித் திருவடி தொழுத
படலத்தில் முடிகின்றது. இந்தப் பெயர் வைப்பு முறையிலும் கம்பன் ஏதோ
உட்கருத்தோடு இப்படலப் பெயர்களை வைத்தானோ என்று நினைக்கத்
தோன்றுகிறது. கடல் என்று கூறினவுடன் 'பிறவிக் கடல்' என்பது பலருடைய
உள்ளத்திலும் தோன்றி நிற்கும். பிறவி என்பது ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு
உயி்ர்வரை பல்வேறு பிறவிகளையும் குறிக்கும். அதனாலேயே வள்ளுவப்
பேராசான் பிறவிக் கடல் என்று கூறாமல், 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர்' (10)
என்றும் 'பிறவாழி' (பிறவு ஆழி) என்றும் கூறிப்போனான். வள்ளுவன்
கணக்குப்படி பிறவியாகிய ஆழியைக் கடப்பவர் இறைவன் அடி சேர்வர்
என்பது தேற்றம். இக்கருத்தை மனத்துட் கொண்ட கம்பநாடன் 'கடல் தாவு
படலம்' என்று முதற் படலத்திற்குப் பெயரிட்டு, தாவினவர்கள் என்ன பயனைப்
பெறுவார்கள் என்று கூறுபவன் போலக் கடைசிப் படலத்திற்குத் 'திருவடி
தொழுத படலம்' என்றும் பெயரிட்டான். பிறவிக் கடலைத் தாண்டினால்
கிடைப்பது திருவடி என்ற கருத்து இங்கே புதைந்துள்ளமை அறி்யப்பெற
வேண்டும். சுந்தர காண்டத்தின் முதற்படலம் கடல்