தாவு படலமாகும். பிறவிக்கடலையும் தாண்டுவதற்கு என்ன தேவையென்பதைக் கிட்கிந்தா காண்டத்தின் மயேந்திரப் படலம் கூறுகிறது. பிறவிக் கடலை ஒருவன் தாண்டவேண்டுமேயானால் அதற்குச் சில அடிப்படையான பண்புகள் தேவை. முதலாவது, யான், எனது என்னும் செருக்கற்ற நிலை (5-6). அடுத்த படியாக வேண்டப்படும் பண்பு புலனடக்கம் ஆகும். அதை வலியுறுத்த வந்த வள்ளுவப் பேராசான், 'அடல் வேண்டு மைந்தன் புலத்தை விடல் வேண்டும் வேண்டிய வெல்லாமொருங்கு' (35.3) என்றும், 'ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின் எழுமையு மேமாப் புடைத்து' (13.6) என்றும் கூறியவற்றால் அறியலாம். அடுத்துள்ள பண்பு தொண்டு மனப்பான்மை யாகும். இதில் முற்றிலுமாக ஈடுபட்டவர்களை இறைவன் ஆட்கொள்கிறான் என்பதை, 'தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே' (தேவாரம் 5.19.9) என்ற நாவுக்கரசர் வாக்கால் நன்கு அறியலாம். பிறவிக் கடலைத் தாண்ட மேலே கூறிய அனைத்தும் தேவை யென்பதை நன்கு அறிந்த கம்பநாடன், இவை இத்தனை பண்புகளும் அனுமனிடம் உள்ளன என்பதைக் காட்டவே மயேந்திரப் படலத்தில் சாம்பனன் கூற்றாகப் பத்துப் பாடல்களில் விளக்கமாகக் கூறுகிறான். இராமகாதையைக் கூறிச்செல்வதோடு மட்டுமல்லாமல் வாய்ப்புக் கிடைக்குமிடங்களிலெல்லாம் இந்நாட்டின் பெரியோர் கண்ட தத்துவங்களைக் கூறிச் செல்வதைக் காண முடியும். கதைப்போக்கு என்று விட்டு வி்டாமல் படலப் பெயர்களைக்கூடச் சிந்தித்துக் கூறியுள்ளான் என்ற நோக்கத்தோடு காண்போமேயானால் இத் தத்துவங்களை நன்கு அறிய முடியும். கடலைத் தாண்டப்புகுந்த அனுமன் முதலாவது சந்திப்பது மைந்நாக மலையே யாகும். அம்மலை மானுட வடிவு தாங்கி அனுமனை விருந்துண்ணுமாறு அழைக்கின்றது. 'கடமையை முடித்தலது உண்ண மாட்டேன்' என்று கூறும் அனுமன், 'என் பணி முடித்து மீண்டும் வந்தால் உன் விருந்தினை ஏற்றுக் கொள்கிறேன்' என்று வந்துவி்ட்டான். அடுத்து அனுமன் சந்திப்பதுசுரசை என்னும் அரக்கியை ஆகும். தேவர் உலகப் பெண்ணாகிய இவள் தேவர்கள் அனுமனின் ஆற்றலை அறிவதற்காக அரக்கி வடிவுடன் அனுப்பப் பெற்றவள் ஆவாள். 'இவ்வரக்கியின் ஆற்றலை வெல்ல முடியுமா' |