என்பது தேவர்களின்ஐயம். என்றாலும், சுரசைக்கும் அனுமனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் அனுமனின் பண்பு நலன்களில் ஒரு பகுதியை விளக்குகிறது. கோர வடிவத்துடன் நின்ற சுரசை 'மிகக் கொடிதான வருத்தும் இப்பசியைப் போக்க உன்னை உண்ணப்போகிறேன். நீயே வந்து என் வாய்க்குள் நுழைந்துவிடு' என்று கூறுகிறாள். (4807) அரக்கர் நாட்டில் புகப்போகும் அனுமன் - அரக்கர் குலத்தை வேருடன் களைய வேண்டும் என்று நினைத்து வரும் அனுமன், இவ்வரக்கியைக் கண்டவுடன் சினம் கொள்ளாமல் நின்றது ஏன்? இதேபோன்ற ஒரு சந்தர்ப்பம் அனுமனின் தலைவனாகிய இராமனுக்கும் ஏற்பட்டது உண்டு. அப்பொழுதும் அவன் பகைமை பாராட்டவோ சினம் கொள்ளவோ இல்லை. காரணம், தாடகை அரக்கி என்று அறிந்திருந்தும் 'பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைத்தான்' (374) என்கிறான் கவிஞன். இராம பத்தனான அனுமன் சுரசை என்ற அரக்கியைப் பார்த்தவுடன் சினம் கொள்ளாமல் இருந்ததற்குக் காரணம் பெண்ணென நினைத்ததே ஆகும். சுரசையின் பேச்சிலிருந்து ஒன்றை அறிந்துகொள்கிறான், அனுமன். பெரும்பசியால் வாடுவதாக அவள் கூறுகிறாள். மானுடவர் குரக்கினத்தவர் ஆகிய அனைவருக்கும் பசி என்பது ஒன்றுதானே. எனவே, அரக்கியே யாயினும் பசி என்று கூறியவுடன் அனுமன் உருகி விடுகின்றான். "இப் புன்புலால் யாக்கையை உனக்கு இரையாக ஆக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், நான் மேற்கொண்டு வந்த காரியம் என் ஆண்டானுக்குச் செய்யும் தொண்டாகும். அத்தொண்டு நிறைவேறவேண்டுமானால் இந்த யாக்கை தேவைப்படுகிறது. அதை முடித்துவிட்டு யானே வந்து உனக்கு இரையாக ஆவேன்" என்ற பொருளில் பின்வருமாறு கூறுகிறான்: 'பெண்பால்ஒரு நீ; பசிப் பீழை ஒறுக்க நொந்தாய்; உண்பாய் எனது ஆக்கையை;யான் உதவற்கு நேர்வல் - விண்பாலவர் நாயகன்ஏவல் இழைத்து மீ்ண்டால், நண்பால்' எனச்சொல்லினன், நல் அறிவாளன்; நக்காள் (4808) யான் மேற்கொண்ட வினையைமுடித்துவிட்டு மீண்டால் "நண்பால் என் உடம்பை யானே உனக்கு உண்ணத் தருவேன்" என்று கூறும் ஒருவன் பண்புடைமையின் சிகரத்தை அடைந்தவனாகிறான். |