22

     'அன்னது காண்டும்யாம்' எனா,
     நின்றார் நின்றுழி,நீல மேனியான்
     நன்று ஆம் நாமம்நவின்று நல்கினார்,
     வன் தோளான்சிறை வானம் தாயவே (4696)

     இந்த வினாடிவரைஇராமனையே பரம்பொருளாகக் கருதி, மானுட
வடிவுடன் கூடிய அந்த இராமனின் பெருமை எல்லையற்ற தென்றும்,
அவனுக்குத் தொண்டு செய்வதே தன் பிறவிப் பெரும்பயன் என்றும்
கருதிவந்தான் அனுமன். வடிவழக னாகிய அந்த இராமபிரானைவிடப்
பெரியதும் உயர்ந்ததும் ஆகிய எதுவும் இருக்க முடியாது என்றும் உறுதியாக
நம்பினான். சம்பாதிக்கு இந்த அற்புதம் நிகழ்கின்ற நேரத்தில், அந்த இடத்தில்
இராமன் இல்லை. பல காத தூரத்திற்கு அப்பால் கிட்கிந்தையில் உள்ளான்
இராகவன். அப்படியிருக்க அவனுடைய நாமத்தை உள்ளன்போடு பலரும்
கூறியபொழுது இந்தச் செயற்கரும் செயல் நிகழ்ந்துவிட்டது. இந்த வினாடியில்
அவனிற் சிறந்தவை அவன் நாமங்கள். மானுட வடிவு தாங்கிய இராமனைவிட
இராம நாமம் மாபெரும் வல்லமையுடையது என்பதைக் கண்கூடாகக்
கண்டுவிட்டா னாதலின், கடலைத் தாண்டவும் அரக்கர் கோட்டையுள் புகவும்,
வென்று மீளவும் அந்த நாமமே தனக்கு உறுதுணை யாகும் என்று உறுதியுடன்
தெளிந்துவிட்டான். நாம ஜெபத்தின் வலிமை எத்தகையது என்பதைப் பத்தி
மார்க்கத்திற்கு வித்தூன்றிய ஆழ்வார்களும் நாயன் மார்களும் விரிவாகப்
பேசிய பிறகு, அதை உறுதிப்படுத்தும் வகையில் கம்பநாடன் அனுமன்
கூற்றாக, இராமன் என்று கூறினால் அனைத்தும் மாறிவிடும்; அதைவிட உறுதி
பயப்பது ஒன்றுமில்லை (4828) என்று கூறுகிறான்.

     கடல் தாவு படலத்தைஅடுத்து இருப்பது ஊர் தேடு படலமாகும். கடல்
தாவு படலத்தில் அனுமனது ஆன்மிக வளர்ச்சியையும் அதனைப் பயன்படுத்தி
அவன் செய்த செயற்கரும் செயலையும் கண்டோம். சுக்கிரீவனுக்கு அமைச்சுத்
தொழில் பூண்டவர்களில் அனுமன் முக்கிய மானவன் ஆவான். அமைச்சன்
என்பவன் நண்பர், பகைவர், நொதுமலர் என்ற முத்திறத்தாரோடும் பழக
வேண்டியிருத்தலின் அவர்களை எடையிடும்போது விருப்பு வெறுப்பை
ஒதுக்கிவைத்து அவர்களை எடை போட வேண்டும். ஒரு நிகழ்ச்சியைக்
காணும் பொழுது தான் அதில் ஈடுபட்டுவிடாமல் புறநிலையாக நின்று
கணித்தலே அமைச்சனுக்கு இலக்கண மாகும். அனுமன் இத்துறையில்