கடுமையாகப் போரி்ட வேண்டிவரும்என்பதாகும். அனுமனது நுண்மாண் நுழை புலத்தால் எந்த வொன்றையும் நடுநிலை பிறழாமல் எடை போடக் கூடியவன் என்பதையும் மேலே கூறிய செய்திகள் மூலம் நன்கு அறியலாம். இதனை அடுத்து அனுமன் செய்கின்ற முடிவுகளில் ஒரேயோர் இடத்தில் சிறு பிழை ஏற்படுகிறது. பேரழகும் பெருங்கற்பும் உடைய மண்டோதரி - (உறங்குபவளைப்) பார்த்து, 'இவள் பிராட்டியோ' என ஐயுறுகின்றான். மாபெரும் அறிஞனானஅனுமன் மண்டோதரியைப் பார்த்து இப்படியொரு முடிவிற்கு வரக் காரணம் யாது ? இராமனை இன்னான் என்று அறிந்துகொண்டவன் அனுமன். இராமனுடைய தேவி பகைவனுடைய அந்தப்புரத்தில் முழு அலங்காரங்களோடு இருக்க முடியுமா என்ற - சாதாரண மனிதர்களுக்கும் தோன்றுகிற - சந்தேகம் அனுமனுக்குத் தோன்றாமல் போனது ஏன் ? எளிதில் விடை கூற முடியாத இந்தப் பகுதியை ஆழ்ந்து சிந்தித்தால் விடை கூற முடியும். அனுமன் இவ்வாறு ஐயம் கொள்வதற்குக் காரணமாக இருந்தவன் இராமனே ஆவான். மாபெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்த இராகவன் யாரிடம் பேசுகிறோம், யாரைப் பற்றிப் பேசுகிறோம் என்று சிந்திக்காமல் ஒரு சிறிய பிழையைச் செய்தான். கிட்கிந்தா காண்டத்திலுள்ள நாட விட்ட படலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தென்திசையை நோக்கிச் செல்லுகிறவர்கள் அனுமன், அங்கதன் முதலானவர்கள் என்று முடிவு செய்யப்பெற்ற பின் இராகவன் அனுமனைத் தனியே அழைத்துச் சீதையை அடையாளம் கண்டுகொள்வதற்காக அனுமனிடம் அவளைப் பற்றி வருணிக்கின்றான். நாட விட்ட படலத்தில் 28 பாடல்களில் (4484-4511) இராமன் இவ் வருணனையைச் செய்கின்றான். பாதாதி கேசமாகச் சொல்லப்படும் இந்த வருணனை தேவை யில்லாததுமட்டுமன்று, பொருத்த மற்றதும் ஆகும். செல்பவன் பணியாளன்; அவனிடம் இத்தகைய விரிவான வருணனை கூறத் தேவை யில்லை. அதிலும் சில உறுப்பு வருணனைகள் பற்றி வருணிப்பது முற்றிலும் பொருத்த மற்றதும் ஆகும். இரண்டு காரணங்களால் இதற்கொரு சமாதானம் கூறலாம். காப்பியப் புலவர்கள் இப்படியொரு வாய்ப்பு நேரும்பொழுது பெண்களை வருணிப்பது உலக காப்பியங்கள் அனைத்திலும் காணப்படும் ஒன்றாகும். கம்பநாடனும் இதற்கு |