காணாமையால், அசோகவனத்தில் வந்து தேடுகையில், பிராட்டியை அவன் கண்டதைக் கூறும் படலம் இது. வம்பு செய்யும் அரக்கியரிடையே 'மென்மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்து' துவண்டுபோய் அமர்ந்திருக்கும் பிராட்டியை ஒரு மரத்தின் மேலிருந்து நோக்குகின்றான் வாயுவின் மைந்தன். கீழே இறங்கிவந்து அவளிடம் பேசி 'இவள்தான் சீதை' என்று முடிவு செய்வதற்கு முன்னரே மரத்தி லிருந்தபடியே 'இவள்தான் பிராட்டி' என்ற முடிவிற்கு அவனால் எவ்வாறு வர முடிந்தது ? நுண்மாண் நுழைபுலம் மிக்கவனும் வேதக் கடலைக் கடந்தவனும் ஐம்புல வேடரை அடக்கித் தவ வலிமையோடு மெய்யறிவும் பெற்று வாழ்பவனுமாகிய அனுமனுக்கு ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் இன்னார் என்று கண்டுகொள்வது அரியது அன்று. இரலைக் குன்றத்தில் நடந்துவரும் இராம- இலக்குவர்களை மறைவாக நின்று கண்ட அனுமன், "தேவருக்கு ஓர் தலைவர் ஆம் முதல் தேவர் எனின் மூவர்; மற்று இவர் இருவர்," (3755) என்றும் "இவர்களே தருமம் ஆவார்" (3762) என்றும் சிந்திக்கத் தொடங்கி, சில வினாடிகளுக்குப் பிறகு இன்னும் சில காரணங்களைச் சிந்திக்கின்றான். 'தென்புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம்?' என்றும் 'என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவுஇல் காதல் (3763)' என்றும் கூறியதோடு அமையாது ஒரு முடிவிற்கு வருகின்றான். அம் முடிவுக்குரிய காரணம் வருமாறு; 'சங்குசக்கரக் குறி உள, தடக்கையில் , தாளில்; எங்கும் இத்தனைஇலக்கணம் யாவர்க்கும் இல்லை; செங் கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே; இங்குஉதித்தனன், (3859) தர்க்க ரீதியாகஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ச்சிகளையும் அவற்றின் முடிவுகளையும் கூறிக்கொண்டுவந்து காட்சி, அனுமானம் என்ற பிரமாணங்களின் அடிப்படையில், மானுட வடிவு தாங்கிய இராமன் திருமால்தான் என்ற முடிவிற்கு அனுமன் வந்ததை இங்குக் காண்கிறோம். இராமனைப் பெற்ற தயரதனும் இராமனை மணந்த பிராட்டியும்கூட இந்த உண்மையை அறிந்தார்களோ என்பது ஐயத்திற்குரியது. முன்பின் பாராமல் இராமனிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், தூரத்தே இருந்து கண்ட அளவிலேயே தர்க்க ரீதியாக இத்தகைய முடிவுக்கு வரக்கூடிய ஒருவனை, 'உலகுக்கு எல்லாம் ஆணி' என்று இராகவன் கூறுவதில் வியப்பொன்றும் இல்லை. இதே அடிப்படையில்தான் மரத்தின் |