கடலிடையே,எல்லையற்ற பலத்தால், கட்டுக்காவலால் வர பலத்தால் சூழப்பெற்றுள்ள தன்னை எவ்விதத் துணையோ, படைபலமோ இல்லாமல் தம் வில் ஒன்றையே நம்பியிருக்கும் இருவர் எவ்வாறு வந்து காக்க முடியும் என்ற ஐயம் பிராட்டியின் மனத்தை அழுத்திக்கொண்டிருக்கும். பெருஞ்சுமையான இதனைப் போக்கப் பிராட்டி பிரிந்ததிலிருந்து இராமனுக்கு வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், சடாயு வீடுபேறு அடைதல், வாலி இறத்தல் முதலியவற்றைக் கூறி இராமனுக்கும் ஒரு பெரும்பலம் உண்டு என விளக்குகிறான் அனுமன். குரக்குப் படை என்றவுடன் மனத்தில் தோன்றும் ஐயுறவைப் போக்கப் பேருரு எடுக்கும் தன் ஆற்றலைக் காட்டி, தன் போன்ற படை வீரர்கள் ஆயிரக் கணக்கில் இராமனுக்குத் துணையாக உள்ளனர் என்றும் அனுமன் கூறுகிறான். உருக் காட்டு படலத்தில் இராகவனைப் பிரிந்த சீதையின் மனநிலையும் விளக்கப்படுகிறது. கணவன் வந்து மீட்பான் என்று ஒரு கணமும், தான் இருக்கும் இடத்தையே அறியாத ஒருவன் எவ்வாறு மீட்கப் போகிறான் என்ற நம்பிக்கை இழந்த நிலை ஒரு கணமும், மாறி மாறி வதைக்க பிராட்டியின் காலம் கழிகிறது. இந்த அவலம் போதாது என்று நெருக்கித் துன்புறுத்துகின்ற அரக்கியர் காவல் ஒருபுறம். அடிக்கடி வந்து பெருந்துன்பத்தை விளைக்கும் இராவணன் ஒருபுறம். இந்த அல்லல்களுக்கு இடையே பட்டு இனி உய்வே யில்லையென்று உயிரைப் போக்கிக்கொள்ள முற்படும் ஒரு பெண்ணின் துயர நிலையை எடுத்து விளக்குகிறது உருக் காட்டு படலம். துயரம், நம்பிக்கை இழத்தல் என்ற இரண்டின் எல்லைக்கே சென்றுவிட்ட நிலையில் நம்பிக்கை துளிர்விட வைக்கின்ற அனுமன் வருகையும் கணவன் பற்றிய செய்தி அறிதலும் அந்நம்பிக்கையை வளர்க்கும் பகுதிகளாக அமைந்துள்ளன. சுந்தரகாண்டத்தின் ஐந்தாவது பகுதி சூடாமணிப் படலமாகும். மிகச் சிக்கலான ஒரு பிரச்சினையை இப்படலத்தில் காண்கிறோம். மாபெரும் உபகாரங்களை செய்து உயிரையே காத்த அனுமன் பிராட்டியிடம் ஓர் வேண்டுகோளையும் முன் வைக்கிறான். "அடியேன் தோள்மிசை கடிது ஏறு"(5354) என்று பெண்ணைப்பற்றியே ஒன்றும் அறியாத அப் பிரமசாரி வேண்டுகோள் விடுக்கிறான். அது எத்தனை இக்கட்டானது என்பதை அறிய அவனுக்கு வாய்ப்பே இ்ல்லை. அவ் இக்கட்டை வெளிப்படையாகச் சொல்வது அவனுடைய மனத்தை |