32

நோகடிப்ப தாகும்.எனவே, பிராட்டி அவனுடைய பெருமைக்குக் குறைவு
வராமல், அவன் செய்த உபகாரத்தை மறவாமல் சில காரணங்களைக் காட்டி
அவ்வாறு வருதல் சரியில்லை யென்று கூறுகிறாள். இராவணண் தன்னை
வஞ்சித்துக் கொண்டுவந்தது போல வஞ்சனையால் மீண்டால் இராமன்
பெயர்க்குமட்டும் அன்று, அவன் ஏற்றுள்ள கோதண்டத்திற்கும் பழியுண்டாகும்
என்று கூறிக்கொண்டுவருகையிலேயே ஓர் அற்புதமான பேச்சைப் பேசுகிறாள்
பிராட்டி. நொந்து, நைந்து  கண்ணீர்க் கடலில் மூழ்கி மென்மருங்குல் போல்
வேறுள அங்கமும் மெலிந்து தன் துயரைப் போக்கிக்கொள்ளத்
தற்கொலைதான் வழி என்ற முடிவிற்கு வந்த ஒரு பெண்ணைப் பார்க்கிறான்
அனுமன். அவள் கமலச் செல்வியே என்பதை உணர்ந்தாலும் கமலச்செல்வன்
வந்து உதவுவதற்குக் காலம் தாழ்க்கும் ஆதலால் அவள் துயரை உடனே
களைய வேண்டும் என்ற கருத்தில்தான் தன் தோள்மீது ஏறிக் கொண்டு
வந்துவிடுக என்று வேண்டிக்கொள்கிறான். பிராட்டியைக் குறைத்து
மதிப்பிடவில்லை யென்றாலும் இந்தத் துயர்க் கடலிலிருந்து அவளைக் காப்பது
தன் கடமையென நினைக்கிறான். இந்த நிலையில்தான் அவன் அந்த
விநாடிவரை காணாத பிராட்டியின் மறுபக்கம் வெளிப்படுகிறது. அவள்
கணவன் முன்னர் ஓர் அவதாரத்தில் "பயந்தவர்களும் இகழ்குறளனாக"
மகாபலியின் எதிரே வந்து ஒரே விநாடியில் மூவுலகையும் ஈரடியால் அளக்கும்
பெரு வடிவு பெற்றதைப்போல் பிராட்டியும் ஒரு வடிவு எடுக்கின்றாள்.

     மிகவும்இரங்கத்தக்கவளாக இதுவரை காட்சி தந்த பிராட்டி திடீரென்று,

     "அல்லல்மாக்கள் இலங்கையது ஆகுமோ?
      எல்லை நீத்தஉலகங்கள் யாவும், என்
      சொல்லினால்சுடுவேன்; அது, தூயவன்
      வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன் (5362)

என்று வீறு தோன்றப்பேசுகிறாள். விசுவரூபம் எடுத்து அனுமன் எதிரே
பேசிய பேச்சாகும் இது. வில்லேர் உழவனாகிய தன் கணவனுக்கு உலகை
அழிக்க வில்லின் துணை வேண்டும். கற்பின் செல்வியாகிய தனக்கு வில்கூடத்
தேவையில்லை. தன் சொல்லே கருவியாகும் என்று பேசுகிறாள்.