மறைகளே தேறத்தக்கவன், வேதியர் வணங்கத்தக்கவன் யாராக இருக்க முடியும்? பரம்பொருளாகத்தானே இருக்க முடியும்? அந்தப் பரம்பொருள், நல்லறமூர்த்தியாகி, இராமன் என்ற மானிட சட்டைதாங்கி வந்துள்ளான் என்பது உண்மையானால் இந்தச் சாதாரணப் பிறைமுக வாளி இந்திரசித்தன் கழுத்தைத் துண்டிப்பதாக என்று சபதம் செய்து, எய்த வாளி அக்கடமையைச் செய்துவிட்டது. இராமானுஜன் என்று சொல்லப்படும் இலக்குவன், இராமனின் தம்பி என்றாலும், தம்பி என்ற உரிமையோடு போர் செய்தபொழுது பயன் ஒன்றும் நிற்கவில்லை. ஆனால், இராமானுஜன் என்ற பக்தன், பரம பாகவதனாக நின்று பரம்பொருளைத் துணைக்கழைத்து 'யான்', 'எனது' என்ற அகங்கார மமகாரங்கள் அடங்கி, இது இறைவன் பணி என்ற நினைவில், ஒரு சாதாரணப் பகழியை ஏவவும், பிரம்மாத்திரம் கூடச் செய்ய முடியாத செயலை, இந்தச் சாதாரண அம்பு செய்துவிட்டது. வேறு படைக்கலங்களைப் பயன்படுத்தி, தன் ஆற்றலைக் கொண்டு இந்திரசித்தனைக் கொன்றிருப்பின், இலக்குவன் பெருமைப்படவும், ஓரளவு கர்வம் கொள்ளவும் அங்கே இடமிருந்திருக்கும். இறைவன் பெயரைப் பயன்படுத்தி, சாதாரண அம்பைப் போட்டு, தன் காரியத்தை முடிக்கும் இலக்குவன் வெறும் கருவிமாத்திரையாக இருக்கின்றானே தவிர, அவனுக்கு என்று தனித்துவம் எதுவும் இல்லை. அதனால்தான் போலும் அவனைக் கட்டித்தழுவிய இராமன், 'ஆடவர் திலக! நின்னால் அன்று' என்று கூறுகிறான் போலும். இராமன் இந்திரசித்தனுடன் நேரே பொருதாவிட்டாலும் அவன் பெயரில் ஆணையிட்டு எய்த அம்பே இந்திரசித்தனைக் கொன்றது. ஆதலால், கும்பனையும், இராவணனையும் போல, இந்திரசித்தனும் இராமன் கையாலேயே மடிந்தான் என்று நினைக்க இடமுண்டு. |